மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 27 பிப் 2020

வாகன வசூல்: மீண்டும் டார்கெட்

வாகன வசூல்: மீண்டும் டார்கெட்

நாடு முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது. அதன்படி, விதிமுறைகள் மீறியும், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை ஓட்டி வருபவர்களுக்கும் அதிகளவில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை விட இது தமிழகத்தில் தீவிரமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 37 காவல் துறை மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நாளில் குறைந்தபட்சம் 3,000 வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என வாய்மொழியாக டார்கெட் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், கிராமங்கள், சிறு நகரங்கள் பல இடங்களில் காவல் துறையினர் நின்றுகொண்டு வரும் வாகனங்களை தடுத்து சிறிய தவறு என்றாலும் அபராதம் விதித்துவிடுகின்றனர். இதனால் வாகனத்தில் வெளியே செல்வதற்கே பொதுமக்கள் அச்சப்படும் சூழல் நிலவி வருகிறது. அதே வேளையில் டார்கெட்டை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ள காவல் துறையினர், தினந்தோறும் புலம்பியபடியே பணியாற்றிவந்தனர்.

இதுதொடர்பாக நாம், அபராதம்: போலீஸ் டார்கெட்-வாகன ஓட்டிகள் அவதி என்ற தலைப்பிலும், வாகன வசூல்:மக்கள் அதிருப்தி-எடப்பாடிக்குத் தெரியாதா? என்ற தலைப்பிலும் விரிவான செய்திகள் வெளியிட்டிருந்தோம்.

அதில், “ஒரு நாளைக்கு 3,000 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்து அபராதம் வசூலிக்க வேண்டும் என்ற டார்கெட் 5,000 வழக்குகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தோம். கடந்த இரு வாரங்களில் வசூலான அபராதத்தின் மூலமாகவே அரசு கருவூலத்தில் கோடிக்கணக்கில் பணம் சேர்ந்திருக்கும் எனச் சொல்கிறார்கள் உயர் அதிகாரிகள்.

நமது செய்தியைப் படித்த காவல் துறையினர், பொதுமக்கள் என பலரும், உண்மையை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். முதல்வர் கவனத்திற்கு சென்றால் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார் என மின் அஞ்சல் மூலமாகவும் நேரிலும் கருத்துக்களை பகிர்ந்தனர் . இந்த நிலையில் நமது செய்தி முதல்வர், காவல் துறை தலைவர் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, செப்டம்பர் 16ஆம் தேதி காலையில் டிஜிபி அலுவலகத்திலிருந்து தமிழகம் முழுவதுமுள்ள உயர் அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு வந்துள்ளது. மோட்டார் வாகன வழக்குகளுக்கு டார்கெட் பிக்ஸ் செய்யாதீர்கள் என்று அதில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் இரண்டு நாட்களாக காவல் துறையினர் நிம்மதியாக பணியை செய்துவந்தனர். இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 19) காலை 5,000 வழக்குகள் டார்கெட் வேண்டாம். வழக்கம் போலவே 3,000 வழக்குகள் மட்டும் பதிவு செய்யுங்கள் என்று மீண்டும் வாய்மொழியாக சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் புலம்பிக் கொண்டே மீண்டும் வாகன வசூலைத் துவங்கியுள்ளனர் காவல் துறையினர்.

வியாழன், 19 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon