மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 27 பிப் 2020

விமர்சனம்: ஒத்த செருப்பு சைஸ் 7

விமர்சனம்: ஒத்த செருப்பு சைஸ் 7

குற்றச்செயலுக்குப் பின்னுள்ள மனதின் மீதான விசாரணை!

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை திரையில் தோன்றும் ஒரே ஒரு கதாபாத்திரமாக பார்த்திபன் மட்டுமே நடித்துள்ள ‘ஒன் மேன் ஷோ’ இது.

தயாரிப்பு: பயாஸ்கோப் ஃபிலிம் பிரேமர்ஸ்

எழுத்து, நடிப்பு, தயாரிப்பு, இயக்கம்: பார்த்திபன்

ஒளிப்பதிவு: ராம்ஜி

படத்தொகுப்பு: ஆர். சுதர்சன்

ஒலிப்பதிவு: ரசூல் பூக்குட்டி

இசை: சந்தோஷ் நாராயணன்

பின்னணி இசை: சி.சத்யா

ஒரு கொலை வழக்கின் மீதான சந்தேகத்தின் பேரில் மாசிலாமணியை (பார்த்திபன்) போலீஸ் கைது செய்கிறது. அவ்வப்போது தனக்குள்ளேயே பேசிக்கொண்டு, தன்னிலை மறக்கும் மாசிலாமணி, தொடர்பின்றி முன்பின் உரையாடுகிறார். பல கட்ட போராட்டங்களுக்குப் பின், போலீஸ் விசாரணையின்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் அதிர்ச்சிகரமான பதில்களே ஒத்த செருப்பு.

பத்து மாதங்களுக்கு முன் திருவான்மியூரில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தைச் சிறு பொறியாக வைத்து, தன் திரைக்கதையாலும், புதுமையான முயற்சியாலும் அதை சினிமாவாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார் பார்த்திபன்.

'லாக் - அப்' விசாரணைகளின்போது காவல் துறை எடுக்கும் முன் முடிவுகள், வரையறுக்கப்பட்ட தர்க்கங்கள், ஒருபக்க சார்பு நிலை, மனிதமற்ற தன்மை, தவறான வார்த்தைகள் என அனைத்தையும் கேள்வி எழுப்புகிறது ஒத்த செருப்பு. விசாரணையின்போது பார்த்திபனை, முழுமையாக எதையும் சொல்ல விடாமல் குறுக்கு விசாரணை செய்யும் போலீசால் வழக்கின் ஆரம்பத்தில் சரியாக ஒத்துழைக்க மறுக்கிறார் பார்த்திபன்.

பார்த்திபனின் மனச் சிக்கலையும், மொழி சிக்கலையும் புரிந்துகொள்ள தடுமாறும் போலீஸ், இயலாமையால் அவரை அடிக்கவும் செய்கிறது. அதன் பின்னர் மனநல மருத்துவர் அழைக்கப்பட்டு அவர் மூலமாகக் கேள்விகள் கேட்கப்பட, பார்த்திபன் தன்னையறியாமல் சகஜமாய் ஒத்துழைக்கும் இடம், கிளாஸ். விசாரணையில் மனநல மருத்துவரையும் உட்படுத்தியது, ஒரு கலைஞனின் பரிந்துரை.

வழக்குக்குத் தேவைப்படும் கேள்விகளுக்குப் பதில் கிடைத்தால் மட்டுமே ஒரு வழக்கு முழுமையடைந்து விடுமா என இயக்குநர் பார்த்திபன் கேட்காமல் கேட்கிறார்.

படம் ஓடும் 1மணி.50 நிமிடங்கள் முழுக்க ஓர் அறையும், பார்த்திபன் மட்டுமே இருந்தாலும் ஒரு சில இடங்களைத் தவிர பெரும்பான்மையான இடங்களில் பார்வையாளனைச் சலிக்க வைக்காமல் அமர வைத்திருக்கிறார் பார்த்திபன். விசாரணையின்போது வரும் போலீஸ் குரல்கள், பார்த்திபன் மனைவி உஷாவின் குரல் (மனதிற்குள்), பார்த்திபனுக்காக ஸ்டேஷன் வெளியே காத்திருக்கும் மாற்றுத்திறனாளி மகன், விசாரணை அறைக்கு வெளியே கூவும் குருவிகள் என சப்தங்களின் மூலமே கதையில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களின் உருவச்சித்திரத்தையும் நம்மிடம் கொடுத்து விடுகிறார் இயக்குநர்.

படம் முழுவதும் நிறைந்திருக்கும் நடிகர் பார்த்திபன், இயக்குநர் பார்த்திபனின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருப்பது ஆறுதல். ஆங்காங்கே வரும் பார்த்திபன் ‘டச்’கள் ரசிக்கவும் சோதிக்கவும் வைக்கிறது. ‘மிஸ்டரி த்ரில்லர்’ வகை ஜானரான ஒத்த செருப்பு, விசாரணையின்போது காவல் துறையுடன் நம்மையும் பங்கெடுக்க வைத்திருக்கிறது.

ஒத்த செருப்பு - மேலோட்டமாகவும், சில நுட்பங்கள் ரீதியாகவும், விசாரணையின்போது குற்றவாளி தனக்கான சுய மரியாதையை நிர்பந்தித்து பெறும் சாமர்த்தியம் போன்ற செயல்களாலும் ஓர் ஆரோக்கியமான சினிமாவாக இருக்கிறது.

ஆனால், பச்சாதாபத்தின் வழியாகக் கதாபாத்திரத்தின் (பார்த்திபன்) முழுமையான சித்திரம் தப்புதல், கொலை செய்வதற்கான காரணமாகக் கூறும் பின்கதை என கருத்தியல் ரீதியாகவும், அணுகுமுறையாலும் மிக தட்டையாகவே செயலாற்றுகிறது ஒத்த செருப்பு.

பொருளாதாரம் ஓர் எளிய குடும்பத்தை எப்படி சிதைக்கிறது எனக் கூறும் ஒத்த செருப்பு, அது மட்டுமே திருமணத்தை மீறிய உறவுக்கு அழைத்து செல்லும் எனக் கட்டமைப்பது மேலோட்டமான பார்வையாகயிருக்கிறது. ஒரு பக்கமிருந்து மட்டுமே அனைத்தையும் பார்த்து, அந்தப் பக்கத்திற்கான அனைத்து சாத்தியங்களையும் திரைக்கதையில் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

ஒரு புதுமையான முயற்சிக்குள் வழக்கத்திலிருக்கும் வடிவமைக்கப்பட்ட திரைக்கதை. அதனாலேயே என்னவோ, எந்த அதிசயமும் நிகழாமல் போகிறது ஒத்த செருப்பில்.

தொழில்நுட்ப ரீதியாகச் சிறப்பாக வந்திருக்கிறது ஒத்த செருப்பு. ஓர் அறைக்குள் நிகழும் கதை என்றாலும்கூட, ராம்ஜியின் ஒளிப்பதிவு பல கோணங்கள், நிறங்கள் மூலம் நம்மை வசியப்படுத்துகின்றன. படத்தில் கேட்கும் அனைத்து குரல்களுக்கும் உருவம் கொடுப்பதில் ரசூல் பூக்குட்டியின் பங்கு முக்கியமானது. ஒலியமைப்பின் வழியாகப் பார்வையாளனின் கவனத்தைத் திசை மாறாமல் படத்தின் மீது செலுத்த வைத்திருக்கிறார் இவர். படத்தொகுப்பு, பின்னணி இசை என அனைத்தும் ஒத்த செருப்புக்குக் கைகொடுத்திருக்கிறது.

மொத்தத்தில், நிறைகளும் குறைகளும் கலந்த ஒரு முயற்சியாகவே வந்திருக்கிறது ஒத்த செருப்பு.

வியாழன், 19 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon