மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

முதல்வர் கனவு எனக்கு இல்லை: அன்புமணி

முதல்வர் கனவு எனக்கு இல்லை: அன்புமணி

முதல்வராக வேண்டும் என்ற கனவு தனக்கில்லை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வன்னியர் சங்கத் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவுக்கு மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சி நேற்று (செப்டம்பர் 17) காடுவெட்டி கிராமத்தில் நடைபெற்றது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மணிமண்டபத்தைத் திறந்துவைத்த ராமதாஸ், குருவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழகத்தில் பாமக ஆட்சியமைக்க வேண்டும் என்பதுதான் காடுவெட்டி குருவின் கடைசி ஆசை. அவரின் கடைசி ஆசையை நாம் அனைவரும் இணைந்து நிறைவேற்றுவோம். நிச்சயம் அது நடக்கும். நமது சமுதாய மக்களின் எண்ணிக்கைதான் நமது பலம். நமக்குள் ஒற்றுமையில்லாததுதான் பலவீனம். நாம் ஒற்றுமையாக இருந்தால் 120 சட்டமன்றத் தொகுதிகளில் தனித்து நின்று வெற்றி பெறலாம். தமிழகத்தை யார் யாரோ ஆண்டார்கள். எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

“நான் முதல்வராக வேண்டும் என்பதோ மேடையிலிருக்கும் மற்றவர்கள் அமைச்சர்களாக வேண்டும் என்பதோ நமது கனவு கிடையாது” என்று தெரிவித்த அன்புமணி, தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதும், நமது சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்பதும்தான் எங்களது எண்ணம். ஆட்சியில் இருந்தால் அது சுலபமாக முடியும் என்றும் விளக்கினார்.

அவரை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் நிறைவுரையாற்றினார். “குருவை வளர விடாமல் அவரைக் கொல்ல வேண்டும் என்று முயற்சி செய்தது, அப்போது ஆண்டுகொண்டிருந்த திமுக. இதற்காகப் பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன” என்று குற்றம்சாட்டிய ராமதாஸ், தான் எந்தக் காலத்திலும் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை என்றும், அப்படி ஆசைப்பட்டிருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon