மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

காட்டுவாசிகளிடம் கற்றவை: 6

காட்டுவாசிகளிடம் கற்றவை: 6

நரேஷ்

சத்தியமங்கலம் வனப்பகுதியும், அதைச் சுற்றியிருக்கும் மலைகளும் பல்வேறு அதிசயங்களை தங்களுக்குள் கொண்டவை. மனிதர்களின் காலடி படாத பகுதி அமேசானில் மட்டுமல்ல; அண்டை நிலமான சத்தியமங்கலத்திலும் இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக கருஞ்சிறுத்தை காட்சி கொடுத்த இடம் இதுதான். கருஞ்சிறுத்தை என்பது சிறுத்தையின் வகையினமல்ல. சாதாரண சிறுத்தை இனத்தில் மரபணு மாறுபாடுடன் பிறப்பவையே கருஞ்சிறுத்தைகளாக நிற மாற்றம் அடைகின்றன. அப்படியாகவே மனிதர்களில் அரிதாக மனமாற்றம் கொண்டு அக்காடுகளைக் காப்பாற்றி வந்த ஒரு கருஞ்சிறுத்தையைப் பற்றிய கதையைக் கதைக்கத் தொடங்கினார் விளாங்கொம்பையின் ஊர் மூதாட்டி.

“வீரப்பன் இருந்த வரைக்கும் இந்தக் காடு பாதுகாப்பா இருந்துச்சு. எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. காடு பத்திரமா இருந்தது. யாரும் அவனுக்குத் தெரியாம இங்கே நடமாட முடியாது. எங்க ஊருக்கெல்லாம் வருவான், திம்பான், போவான். ஏது ஒண்ணுமின்னாலும் அவங்கிட்ட தகிரியமா சொல்லலாம். அவன் போனதுக்கப்புறம் ஆளாளுக்கு வந்து காட்டை பங்கு போட்டுக்குறாங்க” என்று வரலாற்றுக் கதைகளை வாயாறக் கூறினார்.

ஊடக உலகில் கடத்தல்காரனாகவும் வேட்டை மன்னனாகவும் மட்டுமே சித்திரிக்கப்பட்ட ஒரு மனிதனின் மறுபக்கம், மானுடக் காதுகள் வழியாகக் கதைகளாய் இன்றும் கடந்துசென்று கொண்டிருக்கிறன. காத்தவர்கள்தான் காட்டுவாசிகளின் கடவுள். கடைகோடி சாமானியனின் கோயில்களில் இன்றுவரை வேட்டைக் கம்புகளுடன் காத்தவராயன்தான் காத்து நிற்கிறார். இம்மக்களுக்குக் காப்பவை அனைத்தும் கடவுள்தான். உயிர் கொடுக்கும் மலையும், உணவு கொடுக்கும் மழையும் சாமிதான். இச்சாமியை விட்டு வெளிவருவதற்கு இவர்கள் ஒருபோதும் தயாராக இல்லை. தயாராக இல்லாததற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணமும் கதையும் இருக்கிறது.

“எங்க சாமியெல்லாம் இங்கதான் இருக்குது. எங்க சாமிகளை விட்டுபுட்டு நாங்க வரமாட்டோம். நாங்க பொறந்ததும் இதே பூமிதான், சாகுறதும் இதே பூமிதான்.

கீழ பஸ்ஸு காரெல்லாம் ஆக்ஸிடண்ட் ஆகுது. அங்கன இங்கன ரத்தம் சிந்திக் கெடுக்கு. அதையெல்லாம் எங்களால பாக்க முடியல. இங்க பாருங்க, ஏதும் சத்தம் வருதா? எவ்ளோ நல்லா இருக்கு?” என்று தன் தரப்பு காரணத்தை காட்டினார் ஊர் மூதாட்டி.

“நகையப் போட்டுட்டு டவுனுக்குள்ள போனா கழுத்தறுத்துட்டு போயிடுவாங்க. இங்க அப்படி யாரும் இல்ல. கீழ வந்தா வசதி செஞ்சு குடுக்குறோம்னே சொல்லி சொல்லி இறக்க பாக்குறாங்க. இங்க நாங்க என்ன குறைச்சல்ல இருக்குறோம்? அப்படியே குறைச்சல் இருந்து என்ன வசதி செஞ்சு குடுக்குறதுனாலும் இங்கயே செஞ்சு குடுங்க. கீழ வந்தாதான் எங்களுக்கு எல்லாம் செஞ்சு குடுப்பீங்கன்னா, அந்த வசதியே எங்களுக்கு வேண்டாம்!” என்றார் லட்சுமி.

“விறகு, ரக்கிரி, சுண்டக்காயி, தேனு, கிழங்கு, புளி இதெல்லாம் எங்களுக்குத் தேவப்படுது. கீழ போனா, அதுக்கெல்லாம் கண்டிப்பாங்க, காசு கேப்பாங்க. ஆனா, இங்கதான் எல்லாம் கிடைக்குதே. குழந்தைகளெல்லாம் கீழ போகட்டும், படிக்கட்டும், நல்லா இருக்கட்டும். ஆனா, எங்களால வர முடியாது” என்றார் ஆடுகளை ஓட்டிவந்த இரங்கம்மா.

“கீழ வேக்காடு சாமி. தலகாட்ட முடியறதில்ல. நீங்களே பாக்குறீங்கள்ல? எவ்ளோ குளுகுளுன்னு இருக்கு. எதுனா சத்தம் கேக்குதா? நிம்மதியா இருக்குல்ல? அப்புறம் எதுக்கு கீழ வரணும்?” என்ற அவர்களின் கேள்விக்கு நம்மிடம் பதிலில்லை. பேசிக்கொண்டிருக்கும்போதே குழந்தைகளின் குலப்பாடல் இரண்டாம் பாகத்தை எட்டியது.

செடியை நம்பி ஏலேலோ மரம் இருக்கு

ஐலசா ஐலசா..

மரத்த நம்பி ஏலேலோ கிளையிருக்கு

ஐலசா ஐலசா..

கிளைய நம்பி ஏலேலோ இலையிருக்கு

ஐலசா ஐலசா..

(பயணம் தொடரும்...)

திங்கள், 16 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon