மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 23 பிப் 2020

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவின் 100 கோடி திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவின் 100 கோடி திட்டம்!

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. மெசேஜ் வந்து விழுந்தது.

“தமிழகத்தில் நடந்துவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு திமுக தரப்பில் என்னென்னமோ வியூகங்கள் வகுத்துப் பார்த்தும் அவை எல்லாவற்றையும் மத்திய ஆளும் கட்சி என்ற ஒரே தகுதியில் தகர்த்து வருகிறது பாஜக. இப்போது தமிழகத்தில் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்தால் அது ஒரு வேளை திமுகவுக்கு சாதகமாகிவிடுமோ என்ற சந்தேகத்தில் தமிழக ஆட்சியைக் கட்டிக் காப்பாற்றி வருகிறது பாஜக.

ஆனால் இந்த பார்வையெல்லாம் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான். புதுச்சேரியில் இப்போது இருக்கும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தே தீருவது என்றும் அதற்கு பதில் பாஜக ஆட்சியை கொண்டுவருவது என்றும் திட்டமிட்டு செயலாற்றியது டெல்லி. அந்த திட்டம்தான் பலத்த அடி வாங்கியிருக்கிறது.

2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதியும், திமுக மூன்று தொகுதிகளையும் பிடித்து, திமுக ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி பதவி வகித்து வருகிறார்.எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், அதிமுக 4 தொகுதிகளிலும் வெற்றிபெற்றும், ஆட்சியமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மாஹி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றிபெற்றார்.

காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் முன்பே, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடியை நியமித்தது மத்தியில் ஆளக்கூடிய பாஜக. ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருப்பதுபோல் புதுச்சேரி நிர்வாகத்தில் முதல்வரும் துணைநிலை ஆளுநரும் அதிகார மோதலில் ஈடுபட்டு வந்தார்கள். உச்சகட்டமாக, யாருக்கு அதிகாரம் என்று இருவருமே நீதிமன்றப் படியேறினர். முதல்வருக்குத்தான் அதிகாரம், நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநர் தலையிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு போட்டாலும், கிரண்பேடியின் அதிகாரத்தை மையமாகக் கொண்ட செயல்பாடுகள் குறையவே இல்லை.

இருவருக்குள் நடக்கும் அதிகார மோதலால் மக்கள் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை; சாலைகள் போடமுடியவில்லை; வடிகால் வாய்க்கால்களைச் சரிசெய்யமுடியவில்லை எனப் புதுச்சேரி அரசு முழுமையாக முடங்கிப்போயிருப்பதாகச் சொல்கிறார்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ,கள். பாஜகவின் பிரதிநிதி என ஆளுங்கட்சியால் அழைக்கப்படும் கிரண்பேடி, தனது அதிகாரத்தால் பாஜக நிர்வாகிகள் மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ,வாக தேர்வுசெய்து துணைநிலை ஆளுநர் மாளிகையில் சத்தமில்லாமல் மூவருக்கும் பதவிப் பிரமாணமும் செய்துவைத்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் மூத்த அமைச்சருமான நமச்சிவாயம், உழைப்பாலும், பணம் மற்றும் ஆள்பலத்தாலும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வந்தவர். தன்னால் முதல்வராகமுடியவில்லை என்று வருத்தம் அவருக்கு இருந்துவந்தது. அதனால், முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக ஒரு அணியும் உருவானது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ,களுக்குள் மோதல் நடைபெற்றுவருவதை அறிந்த பாஜக டெல்லி தலைமை, காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சியை அமைக்க, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியிடம் பேசினார்கள். உங்களை முதல்வராக்குகிறோம் நீங்கள் பாஜகவில் இணையுங்கள் என்று கூறினார்கள். எப்போதும் மௌனத்தைக் கடைப்பிடிக்கும் என்.ஆர், "என்னை முதல்வராக்குங்கள், பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று டீல் பேசினார்.

பாஜக மூத்த தலைவர்கள் ரங்கசாமியை முதல்வராக்குவதால் பாஜகவுக்கு என்ன பலன், அவர் வேண்டாம் என்று கழட்டிவிட்டது. அடுத்தகட்டமாகப் புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவரும், மூத்த அமைச்சருமான நமச்சிவாயத்தைக் குறிவைத்து டெல்லியிலிருந்து முக்கியமான தலைவர்கள் இரண்டுபேர் பேசினார்கள் “உங்களை முதல்வராக்குகிறோம், நீங்கள் பாஜகவில் சேருங்கள்” என்று.

நிதானமாகப் பேசிய நமச்சிவாயம், ‘ ராகுல் காந்தியும், சோனியா மேடமும் என்னை நம்பி கட்சித் தலைமைப் பொறுப்பும் அமைச்சர் பதவியும் கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட கட்சிக்கும் தலைவர்களுக்கும் எப்போதும் துரோகம் செய்யமாட்டேன்’ என்று பாஜகவின் பேரத்துக்கு

முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

பாஜக, காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்கிறது என்ற தகவல்கள் டெல்லி தலைமைக்குத் தெரிந்து மேலிடப் பார்வையாளர்களைப் புதுச்சேரியில் தங்கி கண்காணித்து தகவல் சொல்லச் சொன்னார்கள். வந்தவர்களும் விசாரித்துவிட்டு “நமச்சிவாயம் ‘ஸ்ட்ராங்காக’ இருக்கிறார்; பாஜகவால் நமச்சிவாயத்தை அசைக்கமுடியாது” என்று சொன்னார்கள்.

மூன்றாவது முயற்சியாகத்தான் என்.ஆர்.காங்கிரஸ் எம்.பி,யாகவிருந்த ராதாகிருஷ்ணனை முதல்வராக்க, எம்.எல்.ஏ,வுக்கு பத்துக்கோடி வீதம் நூறு கோடி ரூபாய் அளிக்க திட்டம் போட்டுள்ளது பாஜக தலைமை. பாஜக தலைவர் அமித்ஷா மகனும் ராதாகிருஷ்ணனும் அடிக்கடி சந்தித்துப் பேசிவருவதாகவும் சொல்கிறார்கள் பலரும்.

ஆனால், பாஜக பண வலைக்கு எம்.எல்.ஏ,கள்தான் யாரும் சிக்கவில்லை. என்ன காரணம் என்று விசாரித்தோம். ‘புதுச்சேரியில் பாஜகவை மக்கள் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளவில்லை. சிறுபான்மையினர் வாக்குகள் புதுச்சேரியில் அதிகமாக இருக்கிறது. பாஜகவை மக்கள் வெறுக்கும் நேரத்தில் பாஜகவுக்கு எம்.எல்.ஏக்கள் தாவினால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், அடுத்த தேர்தலில் போட்டியிடமுடியாது என்ற பயம்தான்’ என்கிறார்கள் இப்போதைய சில எம்.எல்.ஏ.க்களே.புதுச்சேரி காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க 100 கோடியில் திட்டம் போட்டும் முடியாததால் அடுத்த கட்டமாக கடைசி ஆயுதமாக காங்கிரஸ் பிரமுகர்கள் மீது ரெய்டு, சிபிஐ கேஸ் என மிரட்டத் திட்டமிட்டுள்ளது டெல்லி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

திங்கள், 16 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon