மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 23 பிப் 2020

இன்று முதல் தனியார் பால் லிட்டர் 60 ரூபாய்!

இன்று முதல் தனியார் பால் லிட்டர் 60 ரூபாய்!

சில வாரங்களுக்கு முன் ஆவின் பால் விலை லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், ஏற்கெனவே பல முறை பால் விலையை உயர்த்திய தனியார் பால் நிறுவனங்கள், அரசு உயர்த்தியதை ஒட்டி மீண்டும் விலையை உயர்த்திவிட்டன. இதனால் தனியார் பால் லிட்டர் 60 ரூபாயைத் தொட்டிருக்கிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி கூறும்போது, “தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் ஆவின் பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியது. தமிழக அரசு பால் கொள்முதல் விலையைக் காரணம் காட்டி ஆவின் பாலுக்கான விற்பனை விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 2ஆம் தேதி வரை இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக அண்டை மாநிலமான ஆந்திராவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் பால் நிறுவனங்களும், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை உயர்த்தின.

தற்போது அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார் பால் நிறுவனமான 'ஹட்சன்' நிறுவனம் தங்களது நிறுவனத்துக்குப் பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்குப் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதால் 15.09.2019 முதல் ஆரோக்யா பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்துவதாகப் பால் முகவர்களுக்குச் சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது. ஹட்சன் நிறுவனத்தின் பால் விற்பனை விலை உயர்வு காரணமாக தற்போது தனியார் பால் நிறுவனங்களின் ஒரு லிட்டர் பால் விற்பனை விலை 60 ரூபாய் என்கிற அதிகபட்ச விலையை எட்டியுள்ளது” என்றார்.

மேலும் அவர், “பொது மக்களான நுகர்வோர் மீது சற்றும் அக்கறையின்றி இந்த ஆண்டில் மட்டும் ஒரு லிட்டருக்கு சுமார் 8 ரூபாய் வரை தன்னிச்சையாக விற்பனை விலையை உயர்த்தியுள்ளது ஹட்சன் நிறுவனம். மேலும், ஹட்சன் நிறுவனத்தின் இந்த பால் விற்பனை விலை உயர்வைத் தொடர்ந்து நான்காவது சுற்று விலை உயர்வுக்கு அண்டை மாநிலமான ஆந்திராவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் முன்னணி தனியார் பால் நிறுவனங்களும், தமிழகத்தில் உள்ள இதர தனியார் பால் நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. கடந்த மாதம் தமிழக அரசு ஆவின் பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியதின் விளைவாக தற்போது சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு ஆவின் பால் விற்பனை சுமார் 90 ஆயிரம் லிட்டர் வரை வீழ்ச்சியடைந்திருக்கிறது.

பால் விற்பனை விலை உயர்வால் இன்று ஆவினுக்கு ஏற்பட்ட நிலை, தொடர்ச்சியாகப் போட்டி போட்டு கொண்டு விற்பனை விலையை உயர்த்தி வரும் தனியார் பால் நிறுவனங்களுக்கும் ஏற்படும். இதனால், பால் உற்பத்தி மூலம் ஓரளவுக்கேனும் வருவாய் ஈட்டி வரும் விவசாய பெருமக்களும், பால் விநியோகம் மூலம் கிடைக்கிற வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கின்ற லட்சக்கணக்கான பால் முகவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தினை இழக்க நேரிடும்.

எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அண்டை மாநில மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களையும், அதன் பால் விற்பனை மற்றும் கொள்முதல் விலையையும் வரன்முறைபடுத்திட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் பொன்னுசாமி.

சனி, 14 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon