மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

காவேரி கூக்குரல்: சத்குருவை வாழ்த்தும் விவசாயி நேரு

 காவேரி கூக்குரல்: சத்குருவை வாழ்த்தும் விவசாயி நேரு

மேட்டூரில் தொடங்கி சத்குரு அவர்களின் காவேரி கூக்குரல் மோட்டார் சைக்கிள் பேரணி ஈரோடு, பவானி, நாமக்கல் வழியாக திருச்சிக்கு செப்டம்பர் 13 ஆம் தேதி வந்தடைந்தது.

காவேரியின் விஸ்வரூப பகுதியான திருச்சியில் காவேரி கூக்குரல் பேரணிக்கும் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அவர்கள் நிகழ்ச்சியில் காவேரி கூக்குரல் இயக்கத்தை ஆதரித்து பேசும்போது, ஒவ்வொரு இந்தியனும் சாதி, மதம், மொழி மற்றும் கட்சி பாகுபாடுகள் கடந்து, இதற்காக ஒன்றுகூடினால், இப்போதிருந்து 12 வருடங்களில் நாம் இவ்வியக்கத்தின் வெற்றியினைக் கொண்டாடமுடியும் என்று தெரிவித்தார்.

சத்குருவுக்கு ஆதரவு தெரிவித்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத், “வேளாண் காடுகள் உருவாக்கம் என்பது தற்காலிக அம்சமாக இல்லாமல் தலைமுறை கடந்தும் அதன் பலன்கள் இருக்கும் ” என்று நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திருமதி வளர்மதி, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி N. நடராஜன் ஆகியோரும் சத்குருவின் பேரணியை வாழ்த்தினர்கள்.

அதன் பின் திருச்சி திமுக தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடந்த காவேரி கூக்குரல் நிகழ்வில் சத்குரு நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது பேசிய திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு, “அறிவாலயத்தில் மக்களுக்கான நிகழ்வுகள் நடக்க வேண்டுமென்று கலைஞர் சொன்னார். இப்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இங்கே வந்திருப்பவர்களிலேயே அதிக விவசாயம் செய்கிறவன் நானாகத்தான் இருப்பேன். 300 ஏக்கரில் விவசாயம் செய்கிறேன். நானும் இயற்கை விவசாயம் செய்து நடுவில் விட்டுவிட்டேன். இப்போது இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பின் மீண்டும் இயற்கை விவசாயத்தை தொடரலாம் என்று எண்ணுகிறேன்.

கலைஞர் முதல்வராக இருந்தபோது அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்வில் ஐயா (சத்குரு) சொன்னார், ‘மரம் நீங்கள் வளர்த்தால் மரம் உங்களை வளர்க்கும்’ என்று புதிய முழக்கத்தை முன் வைத்தார். காவேரிக் கரையில் பத்து ஆட்கள் சேர்ந்து கட்டிப் பிடிக்கும் அளவுக்கு பெரிய பெரிய மரங்கள் இருந்தன. நான் பார்த்திருக்கிறேன். ஆனால் மணல் அள்ளும் காரணத்தாலும் மரம் வெட்டும் காரணத்தாலும் காவேரி காணாமல் போனது. தனது இறைப்பணி, யோகப் பணிக்கு மத்தியில் இந்த காவேரிப் பணியை செய்யும் ஐயாவை வாழ்த்தி வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டார் கே.என். நேரு.

இது ஒரு விவசாயியின் உணர்ச்சி மிகுந்த உள்ளக் கிடக்கை...

(காவேரி கூக்குரல் ஒலிக்கும்)

விளம்பர பகுதி

வெள்ளி, 13 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon