மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

மிகச் சிறந்த சக நடிகர் தனுஷ்: மஞ்சு வாரியர்

 மிகச் சிறந்த சக நடிகர் தனுஷ்: மஞ்சு வாரியர்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றி மாறன் - தனுஷ் இணையும் படம் அசுரன். பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படங்களின் வெற்றிக்கு பின் இருவரும் இணையும் நான்காவது படமென்பதால் அசுரன் மீதான எதிர்பார்ப்பும் தலைப்பைப் போலவே அசுரத்தனமாக உள்ளது .

இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் மகன் கென் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

90களின் மத்தியில் மலையாளத் திரையுலகின் தேவதையாக வலம் வந்தவர் மஞ்சு வாரியர். கண்ணெழுதி பொட்டும் தொட்டு படத்திற்காக தேசிய விருது, ஈ புழையும் கடன்னு படத்திற்காக கேரள அரசின் மாநில விருது, ஐந்து பிலிம் பேர் விருதுகள் என சிறந்த நடிகைக்காக பல விருதுகளை தன் வசம் ஈர்த்தவர் இவர். சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகும் படம் அசுரன்.

சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், மஞ்சு வாரியர் அசுரன் படம் குறித்த தன் அனுபவங்களை பகிர்ந்தார்:

“எனக்கு அசுரன் ரொம்ப ஸ்பெஷல். மலையாளத்தில் ஏற்கனவே நடித்திருந்தாலும், என்னுடைய முதல் தமிழ் படமிது. முதல் படத்திலேயே பவர்ஃபுல் டீம் அமைந்திருக்கிறது.

தயாரிப்பாளர் தாணு அவர்களுக்கு எனது முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சிறந்த படங்களின் மூலமாக இத்தனை வருட காலமாக சினிமாவில் அறியப்படுபவர்.

இயக்குநர் வெற்றி மாறனின் படங்களுக்காக எல்லோருமே காத்திருப்பார்கள். குறைந்த படங்களே செய்திருந்தாலும், அவர் இயக்கிய ஒவ்வொரு படத்திலும் அவரது முத்திரை இருக்கும். வெற்றி மாறனுக்கு கேரளாவிலும் பெரிய ‘ஃபேன் பேஸ்’ இருக்கிறது. குறிப்பாக, மலையாளத் திரைத்துறையில் அவரது படத்திற்காக எப்போதும் ஆர்வமாக காத்திருப்பார்கள்.

நடிகர் தனுஷ், எனது நண்பர். என்னுடன் பணியாற்றிய மிகச் சிறந்த சக நடிகர்களுள் அவரும் ஒருவர். நான் அவரது மிகப்பெரும் ரசிகை. இவர்கள்(தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ்) மூவரும் ஒரு படத்தில் இணைந்திருப்பதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. படத்தில் பணிபுரிந்த நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என எல்லோருமே அனுபவித்து வேலை பார்த்திருக்கிறோம். நிச்சயம் இந்தப் படம், எல்லோருக்கும் பிடிக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கரிசல் வட்டாரப் பின்னணியில் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது அசுரன். காத்திரமான ஒரு நாவலை வெற்றி மாறன் போன்ற தீவிரமான கலைஞனின் கைவண்ணத்தில், தனுஷின் நடிப்பில் காண ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது.

இன்னும் 21 நாட்களில் திரையில் அசுரன்!

விளம்பர பகுதி

வெள்ளி, 13 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon