மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

38 ஆண்டுகள்: வருமான வரி செலுத்தாத முதல்வர்கள், அமைச்சர்கள்!

38  ஆண்டுகள்: வருமான வரி செலுத்தாத முதல்வர்கள், அமைச்சர்கள்!

அமைச்சர்கள் தங்களது வருமான வரியை தாங்களே செலுத்த வேண்டும் என உத்தர பிரதேச அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 1981ஆம் ஆண்டு அமைச்சர்கள் ஊதியம் மற்றும் அகவிலைப்படி சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு, அந்த வருமான வரியை அரசு கருவூலமே செலுத்திவந்தது. உத்தர பிரதேச முதல்வராக வி.பி.சிங் இருந்த காலத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டம் குறித்து விளக்கமளித்த வி.பி.சிங், “பெரும்பாலான அமைச்சர்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும், மிகச் சொற்ப வருமானம் மட்டுமே வரக்கூடியவர்களாகவும் இருப்பதால் அவர்களின் வருமான வரியை மாநில அரசே செலுத்தும்” என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, கிட்டத்தட்ட 38 ஆண்டுகளாக உத்தர பிரதேச முதல்வர்கள், அமைச்சர்களின் வரியை அரசே செலுத்திவந்தது. தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் முதல்வர்கள் முலாயம் சிங் யாதவ், மாயாவதி, அகிலேஷ், என்.டி.திவாரி, கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா, ராஜ்நாத் சிங், ஸ்ரீபதி குப்தா, வீர் பகதூர் சிங் உள்ளிட்டோரின் வருமான வரியை அரசே செலுத்தியிருக்கிறது. இந்த சட்டத்தின் மூலம் உத்தரப் பிரதேசத்தின் 19 முதல்வர்களும், ஏறத்தாழ 1000 அமைச்சர்களும் பயனடைந்தனர்.

கடந்த ஆண்டில் மட்டும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வருமான வரியாக ரூ.86 லட்சத்தை உத்தர பிரதேச அரசு செலுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இந்த நடைமுறையினை உத்தர பிரதேச அரசு நேற்று (செப்டம்பர் 13) ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக உத்தர பிரதேச நிதியமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா வெளியிட்ட அறிவிப்பில், “உத்தர பிரதேச முதல்வர், அமைச்சர்கள் தங்களது வருமான வரியை இனி சொந்தமாகவே செலுத்த வேண்டும். மாநில அரசின் கருவூலத்திலிருந்து அவர்களுக்கு வருமான வரி செலுத்தப்படாது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவுப்படி இந்த முடிவு எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

சனி, 14 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon