மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

தமிழகம் முழுதும் பேனர் வழக்குகள்!

தமிழகம் முழுதும் பேனர் வழக்குகள்!

சென்னை பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் இல்ல திருமண விழா பேனர் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த விவகாரத்தை தாமாகவே முன் வந்து வழக்காக பதிந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நேற்று (செப்டம்பர் 13) தமிழக முதல்வர், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் மீது சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தது.

ஏற்கனவே பேனர்கள் வரைமுறை தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசு பின்பற்றாதது ஏன் என்று விளக்கம் அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் தமிழக அரசு பெற்ற குட்டுகளிலேயே பலமான குட்டு இதுதான் என்பதால் உடனடியாக தமிழகம் முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர்களுக்கும், எஸ்பிக்களும் உத்தரவு பறந்தது.

இதையடுத்து அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு செய்து விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை வைத்தோர், பேனர்களை தயாரித்தோர் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். இந்த வகையில் இன்று காலை முதல் மதியம் வரை ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்ட பேனர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க ஏதுவாக பெருமளவிலான வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

சனி, 14 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon