மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

மகளை கல்லூரியில் சேர்க்க லஞ்சம்: நடிகைக்குச் சிறை!

மகளை கல்லூரியில் சேர்க்க லஞ்சம்: நடிகைக்குச் சிறை!

கல்லூரி சேர்க்கை ஊழலில் ஈடுபட்டதற்காக அமெரிக்க நடிகை ஃபெலிசிட்டி ஹஃப்மானுக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2004 -2012 வரை அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி சீரியலான Desperate Housewives தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஃபெலிசிட்டி ஹஃப்மான். இதில் சிறப்பாக நடித்ததற்காக அமெரிக்காவின் எம்மி என்ற விருதையும் பெற்றுள்ளார். 2005 ஆம் ஆண்டு திரைப்படமான டிரான்ஸ்அமெரிக்காவில் நடித்ததற்காகச் சிறந்த நடிகையாக ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். புகழ்பெற்ற நடிகையான ஃபெலிசிட்டி ஹஃப்மானின் மூத்த மகள் சோபியா.

2017ஆம் ஆண்டு தனது மகளைக் கல்லூரியில் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வை எழுதவைத்து, சம்பந்தப்பட்ட துறை ரீதியிலான அதிகாரிகளுக்கு 15,000 அமெரிக்க டாலர்கள் ஃபெலிசிட்டி ஹஃப்மான் ரகசியமாக லஞ்சம் கொடுத்தது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, முக்கிய அமெரிக்க பல்கலைக்கழகங்களான யேல், ஸ்டான்போர்ட், ஜார்ஜ்டவுன், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் வேக் ஃபாரஸ்ட் ஆகியவற்றில் தங்களது பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் 51 பணக்கார பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பிரபல நடிகையான ஃபெலிசிட்டி ஹஃப்மானும் ஒருவர்.

இந்நிலையில் ஃபெலிசிட்டி ஹஃப்மான் 14 நாட்கள் சிறையில் கழிக்க வேண்டுமென்றும், 250 மணிநேரங்கள் சமுதாய சேவையில் ஈடுபடுவது மட்டுமன்றி, 30,000 டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டுமென்று அமெரிக்க நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 13) உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஃபெலிசிட்டி ஹஃப்மான் கூறுகையில், ”என்னுடைய செயலுக்கு எவ்வித சாக்குப்போக்கையும் நான் முன்வைக்க விரும்பவில்லை. இந்த செயலை செய்ததற்காக நான் மீண்டும் எனது மகள் ,கணவர், குடும்பத்தினர் மற்றும் கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

என்னை பார்த்து என் மகள், 'நீங்கள் என்னை நம்பவில்லையா? என்னால் சாதிக்க முடியுமென்று நீங்கள் நினைக்கவில்லையா?' என்று கேட்டார். ஆனால், என்னிடம் அதற்கான பதில் இல்லை” என்று தெரிவித்துள்ளார். இந்த ஊழலில் ஈடுபட்ட பெற்றோர்களில் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்ற முதல் பெற்றோர் இவர் ஆவார்

சனி, 14 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon