மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 1 ஏப் 2020

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல்: வானதி சீனிவாசன்

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல்: வானதி சீனிவாசன்

வரும் நவம்பர் மாதம் தமிழக பாஜக தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜக தமிழக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்ற நிலையில், அதற்கு முன்னதாகவே தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார். இருப்பினும் இதுவரை புதிய மாநிலத் தலைவர் யாரென்று அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பான விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. அடுத்த தலைவர் யாரென்பது குறித்து தமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம் என்ற தலைப்பில் நாம் செய்தியும் வெளியிட்டுள்ளோம்.

இந்த நிலையில் கோவையில் நேற்று (செப்டம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன், “கட்சியின் அமைப்புத் தேர்தல் நடைபெறத் துவங்கியிருக்கிறது. இம்மாத இறுதிவரை பாஜகவின் கிளைகளுக்கு தேர்தல் நடைபெறும். 25 உறுப்பினர்கள் இருக்கும் கிளைகளுக்குத்தான் தேர்தல் நடத்துவதற்கு அனுமதி. அதனைத் தொடர்ந்து ஒன்றியம், நகரப் பகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும். பின்னர் மாவட்டத் தலைவர்கள் தேர்தல் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

மாநிலத் தலைவர் இல்லையென்றாலும் கூட கட்சிப் பணிகள் எவ்வித சுணக்கமும் இன்றி நடைபெற்று வருவதாகத் தெரிவித்த வானதி சீனிவாசன், “நவம்பர் மாதம்தான் மாநிலத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என கட்சி அறிவித்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கெல்லாம் இடையிலேயே தலைவர்களை அறிவித்துள்ளனர். அதுபோல தமிழகத்துக்கும் இடைப்பட்ட காலத்திலேயே தலைவர் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு” என்றும் குறிப்பிட்டார். தமிழகத்தில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 45 லட்சமாக இருப்பதாகவும் வானதி சீனிவாசன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 13 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon