மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

எடப்பாடிக்கு தகுதியில்லை: துரைமுருகன்

எடப்பாடிக்கு தகுதியில்லை: துரைமுருகன்

திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

நீர் சிக்கனம் குறித்து அறிந்துவர இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், அதனை விமர்சனம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின், “உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல், கடலில் கலக்க அனுமதித்து விட்டு, உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக 'இஸ்ரேல் போகிறேன்' என்பது வேடிக்கை மிகுந்த விநோதமாக இருக்கிறது” என்று விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி “நீர் மேலாண்மைக்கு திமுக. ஆட்சியில் என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன ?” என்று சேலத்தில் பேட்டியளித்தபோது கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், திமுக ஆட்சியில் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்தவருமான துரைமுருகன் நேற்று (செப்டம்பர் 13) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தான் வகிக்கும் துறையில், தனக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாத ஒரு முதல்வரை, பொதுப்பணித்துறை தனது அமைச்சராகப் பெற்றிருப்பது கண்டு தமிழக மக்கள் வெட்கமும் வேதனையும் கொள்கிறார்கள்” என்று விமர்சித்துள்ள துரைமுருகன், 1967 முதல் 2011 வரை 41 க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டி, தமிழகத்தின் நீர் மேலாண்மைக்கு மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்கியது கலைஞர் முதல்வராகவும், நான் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்த திமுக ஆட்சியில் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகளை பட்டியலிட்டுள்ள துரைமுருகன், “பாசனத்திற்கு ஏற்ற வகையில் 3117 ஏரிகள், 534 அணைக்கட்டுகள் போன்றவற்றை புதுப்பித்து, சீரமைத்து, 5774 கிலோ மீட்டர் தொலைவிற்கு நீர் வரத்துக் கால்வாய்கள் என்று பல்வேறு நீர் பாசனத்திட்டப் பணிகளை நிறைவேற்றியதும் திமுகதான். இந்த தகவல்கள் அனைத்தும் விவசாயப் பெருமக்களுக்கு நன்றாகவே தெரியும்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

“திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிட்டீர்கள் என்று திமுக தலைவரை பார்த்து ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு, 5.42 லட்சம் கோடி முதலீடு வரப் போகிறது என்று ‘பகட்டு’ அறிவிப்பை வெளியிட்டு - இப்போது 14 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ள பழனிசாமிதான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வெளியாகி இருக்கும் இந்த 14 ஆயிரம் கோடி ரூபாய் விவகாரத்தை முதலமைச்சரால் மறுக்க முடியுமா?மறுக்கட்டுமே பார்க்கலாம்” என்று கேள்வி எழுப்பியுள்ள துரைமுருகன்,

பத்து அமைச்சர்களை அழைத்துக் கொண்டு முதலீடு பெற உலகச் சுற்றுலா போன அவர்தான், தமிழக மக்களுக்கு வெள்ளை அறிக்கை வழங்க வேண்டும். வெள்ளை அறிக்கை கேட்பதோ, கொடுப்பதோ கெட்ட காரியம் அல்ல. வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு பழனிச்சாமிக்குத்தான் உண்டு. அதைக் கொடுப்பதற்கான யோக்கியதாம்சமோ உள்ளீடோ எதுவும் இல்லாத கோபத்தில் எங்கள் தலைவர் மீதும், திமுக ஆட்சி மீதும், கறுப்புச் சொற்களைப் பயன்படுத்திப் பாய்ந்திருக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்திருக்கும் அதிமுக ஆட்சியின் தற்போதைய முதலமைச்சராக இருக்கும் பழனிசாமிக்கு தி.மு.க. ஆட்சி பற்றியோ, கலைஞர் மற்றும் ஸ்டாலின் குறித்தோ எதிர்மறை விமர்சனம் செய்ய எவ்விதத் தகுதியுமில்லை” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

வெள்ளி, 13 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon