மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஏப் 2020

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு சென்ற ‘பரமக்குடி’ எச்சரிக்கை!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு சென்ற ‘பரமக்குடி’ எச்சரிக்கை!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“ஆகஸ்ட் இறுதி வாரம் முதல் நவம்பர் முதல் வாரம் வரை தென் மாவட்டத்தில் காவல்துறைக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டுவிடும். அதுவும் சமீப ஆண்டுகளாக இந்த அழுத்தம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. செப்டம்பர் 11 இமானுவேல் சேகரன் நினைவு தினம், தொடங்கி அக்டோபர் 30 தேவர் ஜெயந்தி வரையிலான பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு தொடர்பான கண்காணிப்புகள்தான் இதற்குக் காரணம். பல்வேறு அமைப்புகளின் சார்பில் அஞ்சலி செலுத்தவும், மரியாதை செலுத்தவும் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்து செல்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு அமைப்புக்கும் நேரம் ஒதுக்குவதிலிருந்து, அந்த அமைப்புகளின் பின்னணி என்ன என்பது பற்றிய ஆய்வு, பாதுகாப்பு என்று ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கும் பெரும் சவாலான காலகட்டம்தான் இந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்கள்.

இந்த வருடம் செப்டம்பர் 11 ஆம் தேதி தமிழக அரசின் திறமையான செயல்பாடுகளால் பரமக்குடியில் நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு தினம் பதற்றம் எதுவுமின்றி அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. முதல்வர் எடப்பாடி வெளிநாட்டில் இருந்தபோதும் பாதுகாப்பு ஏற்பாடுகள், அதை நடைமுறைப்படுத்துதலில் தொய்வின்றி செய்திருந்தனர். அதுவும் மழை வேறு கொட்டித் தீர்த்த நிலையில் பரமக்குடி புற வழிச் சாலையில் இருந்தே போலீசாரின் செக்கிங் உள்ளிட்ட எந்த கடமையிலும் இடைவெளி விழாமல் பார்த்துக் கொண்டனர். மூன்று நாட்கள் போலீசார் உறங்காமல், சட்டம் ஒழுங்கு ஏற்பாடுகள் விரிவான அளவில் செய்யப்பட்டிருந்தன. இதே அமைதி தேவர் ஜெயந்தி விழாவிலும் தொடர வேண்டும் என்பதே தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு,

ஒருபக்கம் இப்படி நிர்வாக ரீதியில் அதிமுக அரசு நல்ல பெயர் எடுத்துவிட்டாலும், இன்னொரு பக்கம் அரசியல் ரீதியாக அதிமுகவுக்கு பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது இந்நிகழ்வு. பொதுவாகவே தேவர் குருபூஜைக்கு வரும் அளவுக்கு தலைவர்கள் இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு வருவதில்லை என்ற ஒரு விவாதம் அரசியல் அரங்கில் நீண்ட நாட்களாக உண்டு. அதை உடைத்து இவ்வருடம் திமுக தலைவர் ஸ்டாலின் பரமக்குடி செல்வதாக திட்டமிட்டவுடனேயே தென்மாவட்டத்தில் திமுகவில் இருந்தும் வெளியில் இருந்தும்

ஸ்டாலினுக்கு பரமக்குடி வரவேண்டாம் என்று அழுத்தங்கள் சென்றுள்ளன. ஆனாலும், அதையெல்லாம் உடைத்து கனிமொழி எம்.பி.யோடு வந்து அஞ்சலி செலுத்தினார்.ஸ்டாலின்.

‘தியாகி இமானுவேல் சேகரன் தீண்டாமையை ஒழிக்க போராடியவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். 1950-ம் ஆண்டு விடுதலை இயக்கத்தைக் கண்டவர். 1954-ல் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தி அதற்காக போராடி வெற்றி கண்டவர்’ என்று புகழாரம் சூட்டிய ஸ்டாலின், இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு நிகழ்வாக அறிவிக்க வேண்டியது ஆளுங்கட்சியின் பொறுப்பு என்றும் சுட்டிக் காட்டினார். அமமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வந்து அஞ்சலி செலுத்தினார். பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரமக்குடி வந்தார். ஆனால் ஆளுகிற அதிமுக சார்பில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதுமட்டுமல்ல அஞ்சலி நிகழ்வுக்காக வந்த அமைச்சர் ஆர். பி. உதயகுமாரின் கண்களில் ஒரு இடத்தில் கூட அதிமுக விளம்பரங்களோ வரவேற்பு வளைவுகளோ தென்படவில்லை. அதிமுகவின் அந்த கொஞ்ச நஞ்ச ஏற்பாடுகளும் பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சதர்ன் பிரபாகர் கடைசி நேரத்தில் செய்தவை என்பதும் உதயகுமாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. மாவட்டச் செயலாளர் எம்.ஏ. முனியசாமியை அழைத்த அமைச்சர் உதயகுமார், ‘இந்த நிகழ்ச்சியை வச்சி தமிழ்நாடு லெவல்ல எவ்வளவு அரசியல் நடக்குதுனு உங்களுக்குத் தெரியும்.திமுக தலைவர் ஸ்டாலின் இங்க வர்றாரு. ஆனா அதிமுக ஆளுங்கட்சியா இருந்தும் ஏன் முக்கிய நிர்வாகிகள் வரலைனு ஒருபக்கம் நம்ம கட்சிக்காரங்களே கேட்குறாங்க. இந்த நிலைமையில மாவட்டம் முழுசும் ஏதோ திமுக நிகழ்ச்சி மட்டும்தான் நடக்குற மாதிரி எங்க பார்த்தாலும் திமுக கொடியும் விளம்பரமும்தான் இருக்கு. நம்ம கட்சி சார்புல ஏன் ரொம்பக் குறைவாதான் ஏற்பாடுகள் பண்ணியிருக்கீங்க. .இதெல்லாம் பார்த்தா தேவேந்திர குல வேளாளர்களை அதிமுக புறக்கணிக்குதுனு ஏற்கனவே சிலர் பண்ற பிரச்சாரம் சரினு ஆயிடாதா?’ என்று கேட்டிருக்கிறார். அமைச்சரின் கேள்விகளுக்கு மாவட்டச் செயலாளரிடம் இருந்து சரியாக பதில் வராத நிலையில், ‘நான் இதைப் பத்தி சிஎம்கிட சொல்லுறேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்ற அமைச்சர் முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுவிட்டார்.

’ராமநாதபுரம் அதிமுக சார்பில் அமைச்சர் யாரும் இல்லாததால் ஏற்பாடுகள் முடங்கியதா அல்லது இமானுவேல் சேகரன் நினைவு தினம் என்பதால் அதிமுக நிர்வாகிகள் அடக்கி வாசிக்கிறார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும். பரமக்குடி, மானாமதுரை உள்ளிட்ட தனித் தொகுதிகளில அதிமுக வெற்றிபெற்ற நிலையில்தான் ஆட்சி தொடர்கிறது. இந்நிலையில் தேவேந்திர சமுதாயத்தை தொடர்ந்து அதிமுக புறக்கணிப்பதாக மக்கள் நம்பத் தொடங்கினால் அது அதிமுகவுக்கு ஏற்கனவே இருக்கும் சாதி முத்திரையை உறுதிப்படுத்தி வரும் தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்’ என்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தும் எடப்பாடிக்கு எச்சரிக்கைத் தகவல்கள் சென்றுள்ளன. இது அமைச்சரவை மாற்றம் வரை முதல்வரை யோசிக்க வைத்துள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்த வாட்ஸ் அப் ஆஃப் லைன் போனது.

சனி, 14 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon