மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 1 ஏப் 2020

ஒரே நொடியில் சுபஸ்ரீ உயிரைப் பறித்த பேனர்: சிசிடிவி காட்சி!

ஒரே நொடியில் சுபஸ்ரீ உயிரைப் பறித்த பேனர்: சிசிடிவி  காட்சி!

சட்டவிரோத பேனர் சரிந்து விழுந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பள்ளிக்கரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் தனது மகன் திருமணத்துக்காகச் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனரால் குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தது. சுபஸ்ரீக்கு நேர்ந்தது யாருக்கும் நேரக்கூடாது என வலியுறுத்தும் அவரது தந்தை இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில் சுபஸ்ரீ மரணத்துக்கு யார் பொறுப்பு என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர், ட்விட்டரில் #whokilledshubhashree என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது. இந்த விபத்தில் தொடர்புடையதாக, கூறி சுபஸ்ரீ மீது ஏறிய தண்ணீர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அந்த பேனரை அச்சடித்த அச்சகத்துக்கும் சீல் வைத்துவிட்டனர். ஆனால் பேனர் வைக்க முக்கிய காரணமாக இருந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜெயபால், ”பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க வாய்ப்பே இல்லை. அவரது உயிரிழப்புக்கும் எனக்கும் தொடர்பு இல்லை” என்று பதில் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் பேனர் அந்த பெண் மீது விழுந்து விபத்து ஏற்படும் வீடியோ காட்சி வெளியாகியிருக்கிறது. அதில், லாரி, இருசக்கர வாகனம், கார்கள் செல்லும் பரபரப்பான ரேடியல் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஒன்று தொங்கியபடி காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது. கட்சிக்கொடிகளும் சிறிது சிறிது தூரத்தில் பறந்துகொண்டிருக்கின்றன. அப்போது அந்த பகுதியில் விபத்து ஏற்பட்ட மறுபக்க சாலையில் ஒரு லாரி செல்கிறது. இதனால் ஏற்பட்ட காற்றின் வேகத்தால் தொங்கிக் கொண்டிருந்த பேனர் கீழே விழும் வகையில் காற்றில் பறந்துகொண்டிருக்கிறது. சரியாகப் பிற்பகல் 2.50 மணிக்கு அவ்விடத்தை சுபஸ்ரீ கடக்கிறார். சுபஸ்ரீ மிதமான வேகத்தில் தான் செல்கிறார். சாலை விதிப்படி ஹெல்மெட்டும் அணிந்திருக்கிறார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரே ஒரு நொடியில், பறந்துகொண்டிருந்த அந்த பேனர் சுபஸ்ரீ மீது திடீரென விழுகிறது. இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுகிறார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறும் வரை வீடியோவில் பதிவாகியுள்ளது.

விபத்து ஏற்பட்டு தலைக் கைகளில் அடிபட்டு உயிருக்குப் போராடும் சுபஸ்ரீயை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கூட வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை நான்கு, ஐந்து பேர் தூக்கிச் சென்று ஆட்டோவில் ஏறும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

வெள்ளி, 13 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon