மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 1 ஏப் 2020

கிச்சன் கீர்த்தனா: சீஸ் ஆம்லெட்

கிச்சன் கீர்த்தனா: சீஸ் ஆம்லெட்

ஆம்லெட் என்கிற பிரெஞ்சு வார்த்தை அறிமுகமானது என்னவோ 16-ம் நூற்றாண்டில்தான். ஆனால், அதற்கு வெகுகாலம் முன்னதாகவே ஆம்லெட் போன்ற முட்டை உணவு ருசிக்கப்பட்டுவிட்டது. உதாரணமாக...1393இல் பாரிஸ் பெருநகரத்தில் வெளியிடப்பட்ட வீட்டுக்குறிப்பு நூலிலேயே இதற்கான ரெசிப்பி இடம்பெற்றிருக்கிறது. இதற்கும் முன்னால், `ஆதி ஆம்லெட்’ உருவான இடம் பண்டைய பெர்சியாவாகத்தான் இருக்கக் கூடும் என்று கணிக்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆம்லெட் ஆராய்ச்சியைவிட அதன் சுவையும், எளிதாகவும் விரைவாகவும் சமைக்க உதவுகிற தன்மையும் நம்மில் பலரையும் ஈர்க்கும். எதனோடும் கலக்கலாம் என்பதற்கேற்ப, பால் முதல் காய்கறிகள், மாமிசம் வரை விருப்பத் தேர்வு செய்து விதம்விதமான ஆம்லெட்டுகளை சட்டென தயாரிக்க முடியும். அதற்கு உதாரணம், இந்த சீஸ் ஆம்லெட்.

என்ன தேவை?

2 ஆம்லெட் செய்ய

முட்டை – 2

செடார் சீஸ் (துருவியது) – 3 டேபிள்ஸ்பூன் (அல்லது மொசரெல்லா அல்லது வேறு ஏதாவது சீஸ்)

மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்

சில்லி ஃபிளேக்ஸ் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

வெண்ணெய் - 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி 2 டேபிள்ஸ்பூன் துருவிய செடார் சீஸ், மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ், உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும். ஒரு தோசைக்கல்லை சுடவைத்து, வெண்ணெய் சேர்த்து சூடானதும் முட்டைக் கலவையை ஊற்றவும். மேலே மீதம் இருக்கும் சீஸ் தூவி மூடி போட்டு வேகவைக்கவும். முட்டை வெந்ததும் திருப்பிப் போடாமல் அடுப்பிலிருந்து எடுத்துப் பரிமாறவும். மூடி போடாமல் முட்டைக்கலவையின் ஓரங்களை மடித்து வேகவைத்தும் பரிமாறலாம்.

சிறப்பு

முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்..

வெள்ளி, 13 செப் 2019

chevronLeft iconமுந்தையது