மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 1 ஏப் 2020

தேஜஸ் தரையிறக்கும் சோதனை: அபார வெற்றி!

தேஜஸ் தரையிறக்கும் சோதனை: அபார வெற்றி!

கடற்படைக்காக உள்நாட்டிலேயே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, இலகு ரக தேஜஸ் போர் விமானத்தின் தரை இறக்கும் சோதனை நேற்று(செப்டம்பர் 13) வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

இந்தியா தனது ராணுவ தேவைகளுக்காக விமானங்களை வெளிநாடுகளில் இருந்தே வாங்கி வந்திருந்த நிலையை தேஜஸ் மாற்றியது. சோவியத் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட மிக் 21 ரக விமானங்களுக்கு மாற்றாக புதிய இலகு ரக விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஏற்ப 1983 ஆம் ஆண்டு 560 கோடி ரூபாய் செலவில் போர் விமானத்தை உருவாக்கும் திட்டம் துவங்கியது.  2003 ஆம் ஆண்டில், அதிகாரபூர்வமாக அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களால் தேஜஸ் எனப் பெயரிடப்பட்டது.

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டாலும், என்ஜின், ரேடார் உள்ளிட்ட சில தொழில்நுட்பங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. படையில் சேர்க்கத் தகுதியானது என 2011ஆம் ஆண்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விமானம், உலகிலேயே சிறிய, இலகு ரக, ஒற்றை என்ஜின் கொண்ட நவீன போர் விமானமாகும்.

இந்நிலையில், தேஜஸின் அடுத்தகட்ட பாய்ச்சலாக போர்க் கப்பல்களில் தரையிறக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி சோதனை நேற்று கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சா கடற்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் இரண்டு விநாடிகளில், 244 கிலோமீட்டர் வேகத்தில் தரையை நோக்கி வந்த தேஜஸ், சோதனை ஓடுபாதையில் இருக்கும் வலுவான இரும்பு ஒயர்களில் பிடிப்பை ஏற்படுத்தி மிகக் குறைந்த தூரத்திலேயே வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. இதனை பாதுகாப்புப் படையினர் ‘அரஸ்டட் லேண்டிங்’(arrested landing) என அழைக்கிறார்கள்.

பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நாள் இந்திய கடற்படையின் போர் விமான இயக்கத்தின் வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும் எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜெட் விமானங்களை போர்க் கப்பல்களில் தரையிறக்கும் திறன் படைத்த குறிப்பிட்ட சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பிடித்திருக்கிறது.

சனி, 14 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon