மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

சிறப்புக் கட்டுரை: சிலை அரசியல்!

சிறப்புக் கட்டுரை: சிலை அரசியல்!

கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

முதன்முதலாக பரமக்குடி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தியது அரசியல் வட்டாரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாணியைப் பின்பற்றுகிறாரா என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு சில தலைவர்களுக்கு சாலையின் நடுவே சிலை வைப்பார்கள், ஒரு சில தலைவர்களுக்கு சாலை ஓரத்தில் சிலை இருக்கும், சில தலைவர்களின் சிலை மணிமண்டபம், பூங்கா, கடற்கரை அல்லது நினைவிடத்தில் மட்டும் இருக்கும்.

சாதி அடையாளத்தில் சிக்கிக்கொண்ட தேசியத் தலைவர்களை எளிதாக கண்டறியும் வழி என்னவென்றால், அவர்கள் கூண்டுக்குள் வைக்கப்பட்டிருப்பார்கள். அதிலும் அரசியல் அதிகாரமுடைய அமைப்புகளாக இருந்தால் கூண்டு இருக்காது.

தலைவர்கள் சிலை அவர்களது பிறந்தநாள், நினைவு நாளை விட தேர்தல் நாளில் அதிக முக்கியத்துவம் பெறும். காந்தி, நேரு போன்றவர்கள் சிலைக்கு அவ்வளவாக தேர்தல் மரியாதை கிடைக்காது. ஏனென்றால் அவர்களுக்கு மாலை மரியாதை செய்வதால் தேர்தலுக்கு உதவியாக இருக்காது என்ற நம்பிக்கையில் அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.

தேர்தல் விளம்பரங்களில் கூட சாதிக்கொரு தலைவர் என்ற அடிப்படையில் தான் புகைப்படங்கள் இடம்பெறும். தலைவர்களின் தியாகங்கள் அடிப்படையில் இல்லாமல் பெரும்பான்மை சாதி என்ற முன்னுரிமையின் அடிப்படையில் தான் தேசியத் தலைவர்களுக்கு வரிசையில் இடம் கிடைக்கும்.

அரசு விழா நடத்துவது, அந்த அரசு விழாவில் முதல்வர் மாலையிடுவாரா, அமைச்சர் மரியாதை செய்வாரா, கலெக்டர் வருவாரா, தாசில்தார் தலைமையில் விழா நடந்து முடியுமா என்பதெல்லாம் அந்த தலைவர்களின் செல்வாக்கைப் பொருத்து தீர்மானிப்பது அல்ல. மாறாக அந்த தலைவர் பிறந்த சாதி அல்லது அந்த தலைவரைப் பின்பற்றும் சாதியின் செல்வாக்கின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளில் வெளிவரும் அரசு விளம்பரங்கள் கூட அப்படித்தான் கால் பக்கம், அரைப்பக்கம், முழுப் பக்கம் என்று அளவு மாறுபடும்.

முன்பெல்லாம் மாவட்டங்களுக்கும், பேருந்துகளுக்கும், சாலைகளுக்கும் தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டன. இப்போது அப்படியல்ல தலைவர்களின் படங்கள் சட்டமன்றத்தில் திறக்கப்படுகின்றன, மணிமண்டபங்கள் கட்டப்படுகின்றன, கல்லூரிகளுக்கு பெயர் சூட்டப்படுகின்றன.

சமீபத்தில் கூட பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ராமசாமி படையாச்சியார் திருஉருவப்படம் தமிழக சட்டமன்றத்தில் திறக்கப்பட்டது. பரம்பிக்குளம் ஆழியாறு நீர்மேலாண்மைத் திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த பொறியாளர் பழனிச்சாமி கவுண்டர் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த தீரன் சின்னமலை விழாவில் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்திற்கு மட்டுமே முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள், அனைத்துக்கட்சித் தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செய்வது வழக்கம். இதனைத் தொடங்கி வைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதன் தொடர்ச்சியாக முதல்வர்களாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் அந்த நடைமுறையை எழுதப்படாத மரபுபோலவே பின்பற்றி வந்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் உருவச்சிலைக்கு 13.5 கிலோ தங்ககவசம் அணிவித்து பெருமை சேர்த்தார். இதுபோன்ற முக்கியத்துவம் எல்லாத் தலைவர்களுக்கும் கிடைக்காது. ஒருசில தலைவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

மற்ற தலைவர்களின் சிலைக்கு அல்லது படத்திற்கு சென்னையில் தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள் மரியாதை செய்வார்கள்.

கடந்த பத்து, இருபது ஆண்டுகளாக தலைவர்களின் குருபூஜை விழாக்களுக்கு அரசியல் கட்சிகளும் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கி விட்டது. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை, பரமக்குடி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள், திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா, ஈரோடு ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா, விருதுநகர் காமராஜர் பிறந்தநாள் கல்வித்திருவிழா, தஞ்சாவூர் ராஜராஜசோழன் சதய விழா உள்ளிட்ட விழாக்களுக்கு அரசியல் முக்கியத்துவம் மட்டுமின்றி சாதி சார்ந்த அடையாளமும் உருவானது.

அரசியல் கட்சிகளும், சாதி சங்கங்களும் தங்கள் தலைவர்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தவும், தேர்தல் நேரத்தில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் தேசியத் தலைவர்களின் விழாக்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பெருந்திரளாகக் கூடும் மக்கள் கூட்டத்தின் நடுவே தங்களுக்கு வைக்கப்படும் விளம்பர பதாகைகளும், மக்கள் முன்னால் தங்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பும் அப்படியே ஒட்டுமொத்தமாக வாக்குகளாக மாறிவிடும் என்று தலைவர்களும் நம்ப வைக்கப்படுகின்றனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்ட சில தலைவர்களின் நினைவிடங்களுக்கு மட்டும் தவறாமல் சென்று மரியாதை செய்கிறார். நாம் தமிழர் கட்சியினர் முப்பாட்டன் முருகன் தொடங்கி தினத்தந்தி ஆதித்தனார், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வரை ஒரு பட்டியலை வைத்து தமிழ்த் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி நடத்துவது, புகழ்வணக்கம் செலுத்தும் சுவரொட்டி ஒட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், நினைவிடங்களில் நடக்கும் மக்கள் கூட்டத்தில் சீமான் கலந்துகொள்ள மாட்டார். பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், பாமக, புதிய தமிழகம், கொங்கு மக்கள் தேசியக் கட்சி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்கென சில தலைவர்களின் நினைவிடங்களுக்கு மட்டுமே சென்று மரியாதை செய்கிறார்கள்.

நினைவேந்தல் நிகழ்ச்சிகளில், வஉசி, பாரதி, காமராஜர் தொடங்கி வெள்ளையத்தேவன், கட்டபொம்மன், சுந்தரலிங்கம், மருதுசகோதரர்கள், அழகுமுத்துக்கோன், ஒண்டிவீரன், தீரன் சின்னமலை, வல்வில்ஓரி, குயிலி, இம்மானுவேல்சேகரன், பெரும்பிடுகுமுத்தரையர், வேலுநாச்சியார், ராஜராஜசோழன், ராமசாமி படையாச்சியார், ரெட்டமலை சீனிவாசனார், சிங்காரவேலர், நேசமணி தொட்டு, அப்துல்கலாம், பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வரைக்கும் அனைத்து நினைவிடங்களுக்கும் தானே நேரில் சென்று மரியாதை செலுத்தும், மரியாதை செய்யும் ஒரே அரசியல் கட்சித் தலைவர் என்ற பெருமையை கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் பெற்றுள்ளார். அனைத்து விடுதலைப் போராட்ட வீரர்கள், தலைவர்கள் நினைவிடங்களுக்கு தடை இன்றிச் செல்லும் ஒரே தலைவராகவும் சமகால அரசியலில் டிடிவி தினகரன் உள்ளார். இது தேர்தல் நேரத்தில் டிடிவி தினகரன் மீதான மதிப்பையும் அதிகரிக்கச் செய்தது.

டிடிவி தினகரனின் அந்தப் பாணியில் இப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒண்டிவீரன், பூலித்தேவன், இம்மானுவேல் சேகரன், தீரன் சின்னமலை, புல்லான் உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களுக்கு நேரில் சென்று மரியாதை செய்வதை வழக்கப்படுத்திக் கொண்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் செய்யும் போது, அந்தந்தப் பகுதியில் உள்ள தியாகிகள், சமுதாயத் தலைவர்கள், கட்சியின் மூத்தவர்கள் நினைவிடங்களுக்கும், மணி மண்டபங்களுக்கும் நேரில் சென்று மரியாதை செலுத்தியுள்ளார். ஆனால், மக்கள் கூட்டத்தின் இடையே விழாக்கள் நடைபெறும் போது நேரில் சென்று மரியாதை செய்வது புதிய அணுகுமுறையாகவே பார்க்கப்படுகிறது.

எதிர்கட்சித் தலைவர் இந்த ஆண்டு ஒரு விழாவில் கலந்து கொண்டு விட்டால், அடுத்த ஆண்டில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதில் இன்னொரு நன்மையும் இருக்கிறது. ஒரு சில தலைவர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த மரியாதை அனைத்து தலைவர்களுக்கும் கிடைக்கத் தொடங்கும்.

வெறுமனே வாக்கு அரசியலுக்காக மட்டுமே மாலை மரியாதை செய்கின்றனர் என்பது ஒரு பார்வையாக இருந்தாலும், அனைத்து தலைவர்களுக்குமான சமமரியாதை, தலைவர்களின் தியாகத்தைப் போற்றுதல், தலைவர்களின் செயல்பாடுகளை, கருத்துக்களை எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுதல் என்ற அடிப்படையில் கூட மரியாதை செய்யும் நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் பங்கு பெற்று வரலாம். தேர்தல் அரசியலில் எல்லாமே அரசியல்தானே.

வெள்ளி, 13 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon