மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

முதலீடுகள்: ஸ்டாலினுக்கு அமைச்சர் சம்பத் பதில்!

முதலீடுகள்: ஸ்டாலினுக்கு அமைச்சர் சம்பத் பதில்!

அதிமுக ஆட்சியில் வந்துள்ள முதலீடுகள் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தொழில் துறை அமைச்சர் சம்பத் பதிலளித்துள்ளார்.

முதல்வர் தனது வெளிநாட்டுப் பயணங்களை முடித்துக்கொண்டு கடந்த 10ஆம் தேதி இரவு தமிழகம் திரும்பினார். முதல்வரின் பயணம் குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், வெளிநாடுகளின் முதலீடுகளைப் பெறப் போகிறோம் என்று சொல்லி வீராப்புடன் சென்று வெறுங்கையுடன் திரும்பியிருக்கிறார் என விமர்சனம் செய்தார்.

மேலும், “இரண்டு முறை நடந்துள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில், 5 இலட்சம் கோடிக்கு மேல் முதலீடு வந்திருக்கின்றது என்று சொல்கிறார்கள். இதுதொடர்பாக வெள்ளை அறிக்கையாக வெளியிடுங்கள் என்று சட்டமன்றத்தில் பேசினேன். ஆனால், இன்று வரை வெளியிடப்படவில்லை. இதுவரை வந்துள்ள முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இரண்டு நாட்களுக்குள் தமிழக மக்களுக்கு பதிலளிக்க வேண்டும்” என்று கெடு விதித்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் விதமாக தொழில் துறை அமைச்சர் சம்பத் நேற்று (செப்டம்பர் 13) வெளியிட்ட 10 பக்க அறிக்கையில் பல்வேறு புள்ளிவிவரங்களையும் இணைத்துள்ளார். அதில், “தங்கள் ஆட்சிக்காலத்தில் தமிழ் நாட்டையே இருளில் மூழ்கடித்து, தொழில் நிறுவனங்களை சொல்லொணாத் துயரில் ஆழ்த்தியவர்கள், தற்போது தமிழ்நாட்டின் தொழில் துறையின் வெற்றிப்பயணத்தைப் பொறுக்க முடியாமல் வெற்றுக் கூச்சல் போட்டுக்கொண்டிருக்கின்றனர்” என்று விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து, “இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் வந்த மொத்த அந்நிய நேரடி முதலீடு 25,977 கோடி ரூபாய் மட்டுமே. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5,200 கோடி ரூபாய். 2011-2019 ஜூன் வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வந்துள்ள மொத்த அந்நிய நேரடி முதலீடு 1.47 இலட்சம் கோடி ரூபாய். சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 18,350 கோடி ரூபாய் ஆகும். ஆக திமுக ஆட்சி காலத்துடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு வருடத்திலும் மூன்று மடங்கு அளவிற்கு அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ள எம்.சி.சம்பத்,

உலக முதலீட்டாளர் மாநாடு 2015-ல் பல்வேறு துறைகள் சார்பாக கையொப்பம் இடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தரத்தொழில் துறையில் கையெழுத்திடப்பட்ட 10,073 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட முதலீடு 2,42,160 கோடி ரூபாயாகும். கடந்த 18 ஆண்டுகளில் வரப்பெற்ற அந்நிய நேரடி முதலீடான ரூபாய் 1.8 இலட்சம் கோடியில் சுமார் 47 சதவீதம், அதாவது 84,269 கோடி ரூபாய், 2015-ல் ஜெயலலிதாவால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிறகு தான் வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உலகெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ்நாட்டின் சிறப்புகளை எடுத்துரைத்து, முதலீடு செய்ய அழைப்புவிடுத்ததே இதற்கு காரணம். முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லவில்லை என்பதைக்கூட ஒரு சாதனையாக கூறிக்கொண்டு இருந்தால் போட்டிகள் நிறைந்த உலகில் எந்த முதலீடும் வராது என்றும் சுட்டிக்காட்டியுள்ள சம்பத், “புள்ளிவிவரங்களின்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தனியார் துறை முதலீடு ரூபாய் 1,02,772 கோடி ஆகும். 2015 உலக முதலீட்டாளர் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட பல்வேறு நிறுவனங்களின், 1,04,961 கோடி ரூபாய் முதலீடு பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளது. 1,61,822 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

பெருவெற்றி பெற்ற முதல்வரின் பயணம், தமிழ்நாட்டின் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே ஒரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் சார்ந்த அறிவுசார் புரிதலுக்கு இந்தப்பயணம் ஒரு பேருதவியாக அமைந்தது. இதுதவிர மொத்தம் 41 நிறுவனங்களின் ரூபாய் 8,835 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்த்து, முப்பத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பும் இப்பயணத்தால் கிடைத்தது என்றும் எம்.சி.சம்பத் எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும், “மற்ற மாநில முதலமைச்சர்கள், முதலீடுகளை பெறுவதற்கு வெளிநாடு செல்கிறார்கள். அந்த மாநில எதிர்க்கட்சி தலைவர் உள்பட, அனைவரும் அதை வரவேற்று அரசுடன் மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தான் எந்த அடிப்படையும் இல்லாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசுக்கு நல்ல பெயர் வரக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம் செய்து வருகிறார்” என்றும் தனது அறிக்கையில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

வெள்ளி, 13 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon