மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

வாக்குறுதியை மீறிய அமைச்சர்

வாக்குறுதியை மீறிய அமைச்சர்

ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போதும் பொதுத்தேர்வு நடத்தப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், இன்று (செப்டம்பர் 14) பொதுத் தேர்வுகளால் இடைநிற்றலுக்கு வாய்ப்பே இல்லை என்றும், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காகத்தான் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

கட்டாயக் கல்விச் சட்டத்தில் அவ்வப்போது சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த அறிவுறுத்திய மத்திய அரசு அதை மாநில அரசே முடிவெடுக்கலாம் என்று தெரிவித்திருந்தது. இதுகுறித்து கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி கருத்து தெரிவித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ”பொதுத் தேர்வு குறித்து எந்த ஆணையும் அரசு பிறப்பிக்கவில்லை, தமிழகத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு அல்ல எப்போதுமே பொதுத் தேர்வு இல்லை”என்று அழுத்தமாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு தேவையா என்று பல கேள்விகள் எழுந்தன. நமது மின்னம்பலத்தில் விவாதம்: ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு தேவையா? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதற்கிடையில் கடந்த ஆறு மாதங்களாக எந்த வித கருத்துகளும், அறிவிப்புகளும் வெளியாகாத நிலையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை நேற்று (செப்டம்பர் 13) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது.

இந்த அறிவிப்பு குறித்து இன்று (செப்டம்பர் 14) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ”மத்திய அரசின் அறிவிப்புப் படி ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காகவே பொதுத் தேர்வு நடத்தப்படுவதாகவும், இதனால் இடைநிற்றல் அதிகரிக்காது. பொதுமக்களிடமும், பெற்றோர்களிடமும் இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, தற்போது இருக்கும் கல்வியாளர்களும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பொதுத் தேர்வை எழுதி வந்தவர்கள் தான். பொதுத் தேர்வுகள் கொண்டு வருவதன் மூலம், மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். தமிழக அரசைப் பொறுத்தவரை பொதுத் தேர்வுக்கு மூன்றாண்டுக் காலங்கள் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. அதாவது ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட்டாலும், தேர்வில் தோல்வியடைந்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்ல தடையில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே பொதுத் தேர்வு நடத்துவது முழுமையாக அமல்படுத்தப்படும். இந்த காலத்தில் மாணவர்களின் தேர்ச்சியைப் பொறுத்து அவர்களது கல்வித் திறன் மேம்படுத்தப்படும். இதனால் இடைநிற்றல் ஏற்படாது” என்று தெரிவித்துள்ளார்.

சனி, 14 செப் 2019

அடுத்ததுchevronRight icon