மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 1 ஏப் 2020

கனிமொழிக்கு நிலைக்குழு தலைவர் பதவி!

கனிமொழிக்கு நிலைக்குழு தலைவர் பதவி!

நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கான புதிய தலைவர்கள், உறுப்பினர்கள் நியமனம் செய்வதில் தாமதம் ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 13) இரவு நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர்கள், உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம்.பி. கனிமொழி வேதியியல், உரத்துறை நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பல எம்.பி.க்கள் பல குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மரபுகள் உடைக்கப்பட்டன

பொதுவாகவே நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள்தான் அதிகமாக நியமிக்கப்படுவார்கள். குறிப்பாக வெளியுறவுத்துறை நிலைக்குழு, நிதித்துறை நிலைக்குழு ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களே தலைவராக இருப்பார்கள். இந்த மரபுகளை உடைத்து பெரும்பாலான நிலைக்குழுத் தலைவர்களாக பாஜக எம்.பி.க்களே இம்முறை நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜ்யசபாவின் மூத்த காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த சர்மா உள்துறை நிலைக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுவே எதிர்க்கட்சி உறுப்பினர் வசம் சென்றிருக்கும் முக்கியமான ஒரே ஒரு நிலைக்குழு.

நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை உள்ளிட்ட நிலைக்குழுக்களின் தலைவர்களாக பாஜக உறுப்பினர்கள் இருக்க வேதியியல் மற்றும் உரம், அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச் சூழல், சுகாதாரம், தகவல் தொழில் நுட்பம், உணவு, நுகர்வோர் விவகாரம், தொழிலாளர் ஆகிய நிலைக்குழுக்களின் தலைவர் பதவிகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் பாஜகவோடு மிதமாக இருக்கும் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி முன்பு வெளியுறவுத் துறை நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். இப்போது பாதுகாப்புத்துறை நிலைக்குழு உறுப்பினராக ஆக்கப்பட்டிருக்கிறார்.

தமிழக எம்.பி.க்களுக்குப் பதவி

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த மாதம் ஆகஸ்டு 29 ஆம் தேதி அறிவாலயத்தில் கடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்திலேயே நாடாளுமன்ற கமிட்டி தொடர்பான ஆலோசனை நடந்தது. நாடாளுமன்றத்தில் திமுக மூன்றாவது பெரிய கட்சி என்பதால் அக்கட்சிக்கு கணிசமான நிலைக்குழுத் தலைவர்கள் பதவியும், உறுப்பினர்கள் பதவியும் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி எம்.பி.க்களிடையே இருந்தது.

கமிட்டி சேர்மனுக்கு என்று பல சலுகைகள் இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் தனி அலுவலகம், சிறப்பு ஊழியர்கள், விமான டிக்கெட் சலுகைகள் என்று கிடைப்பதால் கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் பலரும் தங்களை சிபாரிசு செய்யும்படி பல வகைகளில் அழுத்தம் கொடுத்து வந்தனர். இதுபற்றியும் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் அரசின் பரிந்துரையின் பேரில் மக்களவை, மாநிலங்களவை தலைவர்களால் நியமிக்கப்படும் நிலைக்குழுக்களின் தமிழகத்தின் சார்பில் கனிமொழி மட்டுமே நிலைக்குழுத் தலைவராகியிருக்கிறார். கட்சியின் சீனியர் எம்.பி.க்கள் என்று பார்த்தால் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பழனிமாணிக்கம்,கனிமொழி ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் நால்வருமே கமிட்டி பதவிகளை எதிர்பார்த்த நிலையில் கனிமொழிக்கு தலைவர் பதவி கிடைக்க, டி.ஆர்.பாலு, ராசா உள்ளிட்டோர் நிலைக்குழு உறுப்பினர்களாகியிருக்கிறார்கள்.

கனிமொழி தலைமையிலான வேதியியல், உரத்துறை நிலைக் குழுவில் வசந்தகுமார், விஷ்ணு பிரசாத் ஆகிய தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர். பணியாளர் குறை தீர்ப்பு, சட்டம்- நீதித்துறைக்கான நிலைக்குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இடம்பெற்றுள்ளார்.

அன்புமணி, திருமாவளவன் உறுப்பினர்கள்

ரயில்வே நிலைக்குழுவில் ஏற்கனவே தலைவராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அதே நிலைக்குழுவில் உறுப்பினராகியிருக்கிறார். வேளாண்துறைக்கான நாடாளுமன்றக் குழுவில் ம.தி.மு.க பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, ம.தி.மு.க எம்.பி., கணேசமூர்த்தி, அ.தி.மு.க எம்.பி., வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கான குழுவில் பா.ம.க அன்புமணி, புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி., வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் செல்வாக்கு செலுத்தக் கூடிய நிலக்கரி, எஃகு உற்பத்தி நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்புத் துறைக்கான நிலைக்குழு உறுப்பினராக தி.மு.க எம்.பி., கலாநிதி வீராசாமி நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தகத் துறைக்கான நிலைக்குழு உறுப்பினராக தி.மு.க எம்.பி., கதிர் ஆனந்த், சண்முக சுந்தரம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஊரக வளர்ச்சித்துறை நிலைக் குழு உறுப்பினராக நாமக்கல் எம்.பி. சின்ராஜ் ஆகியிருக்கிறார்.

திமுக ஏமாற்றம்

நிலைக்குழு உறுப்பினர் பதவிகளை விட, தலைவர் பதவிகள்தான் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் முக்கியத்துவம் பெறும். அந்த வகையில் திமுகவுக்கு ஒரே ஒரு நிலைக்குழு தலைவர் பதவி என்பது அக்கட்சியினர் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சனி, 14 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon