மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

பேனர்களைக் கண்காணிக்க ரோந்து வாகனம்!

பேனர்களைக் கண்காணிக்க ரோந்து வாகனம்!

சென்னை முழுவதும் சட்டவிரோத பேனர்களைக் கண்காணிக்க ரோந்து வாகனம் இயக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி இன்று (செப்டம்பர் 14) அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனரால் குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என அனைவருக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. சட்ட விரோத பேனர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து விதிமீறி வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள பேனர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சுபஸ்ரீ வழக்கில் தொடர்புடைய லாரி ஓட்டுநர், அச்சகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனால் ஜெயபால் மீது மாநகராட்சி உதவிப் பொறியாளர் கமல்ராஜ் பள்ளிக்கரணை காவல் துறையில் புகார் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், ஜெயபால் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304(ஏ) கவனக் குறைவால் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அவர் திடீர் நெஞ்சு வலி காரணமாகக் காமாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செய்தித் துறை அமைச்சர் , சுபஸ்ரீக்கு விபத்து ஏற்பட்டது என்பது எதிர்பாராமல் நடந்தது. இதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது” என்று தெரிவித்திருக்கிறார். உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி சட்டவிரோதமாக யார் பேனர் வைத்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

இது ஒருபுறமிருக்கச் சட்ட விரோத பேனர்கள் வைக்கப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சட்டவிரோத விளம்பர பதாகைகள், பேனர்களை பேனர்களை மீது ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 3,964 சட்டவிரோத விளம்பர பதாகைகள் இதுவரை அகற்றப்பட்டு, 245 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேனர்களைக் கண்காணிக்கச் சென்னை காவல் துறையுடன் இணைந்து ரோந்து வாகனம் இயக்கப்படும். பிரத்தியேக தொலைபேசி எண்ணுடன் கூடிய 3 ரோந்து வாகனங்கள், மண்டலங்களை வட்டாரங்களாகப் பிரித்துச் சுற்றும். 94451 90205, 94451 90698, 94451 94802 ஆகிய தொலைப்பேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் ,சம்பந்தப்பட்ட இடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று நடவடிக்கை எடுப்பர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 14 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon