மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

டிரெய்லரே போதும், படத்தை பாக்க விரும்பல!

டிரெய்லரே போதும், படத்தை பாக்க விரும்பல!

மோடி கூறிய, ‘தேசம் பாஜக ஆட்சியின் டிரெய்லரைப் பார்த்துவிட்டது. முழுப்படம் இனிமேல்தான் பாக்கியிருக்கிறது’ எனக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கிண்டல் செய்திருக்கிறார்.

கபில் சிபல், மத்திய பா.ஜ.க அரசாங்கம் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் 100 நாட்களை நிறைவு செய்து ஒரு வாரம் ஆகிய நிலையில், பொருளாதார மந்தநிலை, மோட்டர் வாகன சட்டம் போன்றவற்றைக் குறிப்பிட்டு மத்திய அரசின் கொள்கைகளையும், பிரதமர் மோடியையும் விமர்சித்திருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செப்டம்பர் 12 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தால் பாஜக துரிதமாக வேலை செய்யும் அரசை, மக்களின் கனவுகளுக்காக வேலை செய்யும் அரசை அமைக்கும் என உறுதியளித்தேன். மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தேன். அவற்றில் பல இன்று நிறைவேறியுள்ளன. முதல் 100 நாட்களில் தேசம் பாஜக ஆட்சியின் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டது. முழுப்படம் இனிமேல்தான் பாக்கியிருக்கிறது" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று(செப்டம்பர் 13) மோடியின் பேச்சைக் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல், "என்னே ஓர் அற்புதமான டிரெய்லர். பிரதமருக்கு நாட்டின் பொருளாதார நிலவரம் தெரியும் என்றே நினைக்கிறேன். இதற்காக அவர் நியூட்டனையோ, ஐன்ஸ்டீனையோ நினைவுகூர வேண்டிய அவசியம் இல்லை.

முதல் காலாண்டில் நமது பொருளாதாரம் 5சதவிகிதமாக சரிந்துள்ளது. இது கடந்த 16 காலாண்டுகளில் இல்லாத அளவிலான வீழ்ச்சி. ஏற்றுமதி தேக்கநிலை கண்டுள்ளது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி கண்டிருக்கிறது. அப்புறம் இந்த டிரெய்லரில் ரூ.5000 சம்பாதிக்கும் நபர் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ரூ.50,000 அபராதம் கட்டுகிறார்.

புலனாய்வு அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. போலி வழக்குகளில் எதிர்க்கட்சியினர் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். இதில் அரசின் சாதனை எங்கிருக்கிறது என்று அவர்களிடமேதான் கேட்க வேண்டும்.

கபில் சிபில் அவரது டிவிட்டர் பக்கத்தில், மோடி 100 நாள் ஆட்சியில் கீழே சரிந்துள்ளது எனக் குறிப்பிட்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவிகிதம், வருவாய் வசூல் 1 சதவிகிதம் அதிகரித்துள்ளது (கடந்த ஆண்டு 22 சதவிகிதம் ஆக இருந்தது), நுகர்வு, வாகன விற்பனை (நேராக 10 வது மாதம்), ஜிஎஸ்டி வசூல், முதலீடுகள் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். மேலே உயர்ந்துள்ளவை என ‘வேலைவாய்ப்பின்மை 8.2’ சதவிகிதம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது டிவிட்டர் பதிவில் “மீதமுள்ள படத்தை நாங்கள் பார்க்க விரும்பவில்லை” என கபில் சிபல் கிண்டல் கலந்த விமர்சனத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

சனி, 14 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon