மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

சட்டத்திருத்தம் அமலுக்கு முன்பே ரூ.6.53 லட்சம் அபராதம்!

சட்டத்திருத்தம் அமலுக்கு முன்பே ரூ.6.53 லட்சம் அபராதம்!

ஒடிசாவில் புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே நாகாலாந்து லாரி உரிமையாளருக்கு ரூ.6.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. பழைய அபராதத் தொகையை விட, சாலை விதிகளை மீறுபவர்களுக்கு 10 மடங்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை டெல்லியைச் சேர்ந்த லாரிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதே அதிகமாக இருந்து வந்தது. ஆனால் நாகாலாந்தைச் சேர்ந்த லாரி உரிமையாளருக்கு ஒடிசா போக்குவரத்து போலீசாரால் ரூ.6.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது, இது புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி, புதிய சட்டத்திருத்தத்தின் படி அபராதம் விதித்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது அபராதம் விதிக்கப்பட்டதற்கான ரசீது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த லாரியின் உரிமையாளர் நாகாலாந்தின் பெக் டவுனில் உள்ள பெத்தேல் காலனியைச் சேர்ந்த ஷைலேஷ் சங்கர் லால் குப்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதே சமயம் ஓட்டுநர் திலிப் கர்தா, ஜார்சுகுடாவைச் சேர்ந்தவர் ஆவார்.

அபராதம் விதிக்கப்பட்டது குறித்து சம்பல்பூரின் பிராந்திய போக்குவரத்து அதிகாரி லலித் மோகன் பெஹெரா கூறுகையில், நாகாலாந்து பதிவெண் கொண்ட அந்த லாரிக்கு 2014 முதல் காலாண்டு வரி செலுத்தவில்லை. லாரியை இடைமறித்து விசாரித்த போது ஓட்டுநர் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சனி, 14 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon