மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

பேனர்களை அகற்றினால்தான் வருவோம்: கறார் அமைச்சர்கள்!

பேனர்களை அகற்றினால்தான் வருவோம்: கறார் அமைச்சர்கள்!

விருதுநகர் மாவட்டத்தில் நடந்த நிகழ்வில், தங்களுக்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்களை அகற்ற அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.

பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் இல்ல திருமண விழா பேனர் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதனையடுத்து, தொண்டர்கள் யாரும் வரவேற்பு பேனர்கள் வைக்கக் கூடாது என்று அதிமுக, திமுக, அமமுக, பாமக, விசிக உள்ளிட்ட பல கட்சிகளும் அறிவிப்புகள் வெளியிட்டன.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அம்மா கூட்டுறவு சிறப்பு அங்காடி மற்றும் பெட்ரோல் பங்க் திறப்பு விழா இன்று (செப்டம்பர் 14) நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள வந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோருக்கு வரவேற்பு அளிக்க பல இடங்களில் அதிமுக தொண்டர்கள் பேனர்கள் வைத்திருந்தனர். நிகழ்ச்சிக்காக வந்த அமைச்சர்கள், இதனைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, அகற்றினால் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்வோம் என்றும் கறாராக கூறிவிட்டு அங்கு கிடந்த சேர்களில் சென்று அமர்ந்துவிட்டனர். இதனையடுத்து, உடனே அங்கிருந்த பேனர்களை ஒவ்வொன்றாக அதிமுகவினர் அகற்றினர். அனைத்து பேனர்களும் அகற்றப்பட்ட பிறகு நிகழ்வில் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு, “தொண்டர்கள் தெரியாமல் பேனர் வைத்துவிட்டனர். அதனை உடனே அகற்றச் சொல்லி உத்தரவிட்டோம். அகற்றிய பிறகே கலந்துகொண்டோம். தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு தொண்டர்கள் பேனர்கள் வைக்கக் கூடாது” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சனி, 14 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon