மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 31 மா 2020

வீட்டுவசதித் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி: நிர்மலா அறிவிப்பு!

வீட்டுவசதித் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி: நிர்மலா அறிவிப்பு!

வீட்டுவசதித் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவிவரும் நிலையில், அதனை சமாளிக்க மத்திய அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கடந்த முறை செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் முடிவினை அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 14) செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், “நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. பொருளாதாரம் சூழல் மீண்டு வருவதற்கான சீரான அறிகுறிகள் தென்படுகின்றன. தொழில் துவங்கும் நடைமுறைகளை எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வீட்டு வசதித் துறை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதில், “தற்போது நடந்துகொண்டிருக்கும் வீட்டு திட்டங்கள், வங்கிகளின் நடவடிக்கைகளால் பாதியில் நிற்கும் வீட்டுவசதித் திட்டங்கள் ஆகியவற்றை விரைந்து முடிக்க தேசிய முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு நிதியாக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினர், அரசு ஊழியர்களுக்கான வீடு கட்டும் திட்டங்கள் இந்த சலுகைக்குள் கொண்டுவரப்படும். இதன்மூலம் சொந்த வீடு கட்டும் அரசு ஊழியர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அன்னிய செலாவணி கையிருப்பு போதுமான அளவு உள்ளது.வரி செலுத்தும் முறையில் சிறிய தவறுகள் இருந்தால் அதற்காக தண்டிக்கப்பட மாட்டார்கள். ஜனவரி 1ம் தேதி முதல் ஏற்றுமதி வரியில் சுங்க வரி நீக்கப்படும். இந்த திட்டத்தால் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் உட்பட பல துறையினர் பயன்பெறுவார்கள். துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் போல 2020ம் ஆண்டு முதல் இந்தியாவிலும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மிகப்பெரிய அளவில் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சி நடத்தப்படும்” என்று குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன்,

சிறு, குறு தொழில்களுக்கான ஏற்றுமதி ப்ரீமியம் மிகக் குறைவாக நிர்ணயிக்கப்படும்.தொழில்துறையினருக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 4 பெரிய நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.வாராக்கடனை வசூலிக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.

சனி, 14 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon