மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

காணாமல் போன ஆளுநரின் செல்போன்!

காணாமல் போன ஆளுநரின் செல்போன்!

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும் துணை நிலை ஆளுநரான கிரண் பேடி தொடர்ந்து அரசு செயல்பாடுகளில் தலையிட்டு வருகிறார் என காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அதனை பொருட்படுத்தாமல் கிரண் பேடி தினந்தோறும் பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார்.

புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 4.5 கி.மீ நீளம் கொண்ட பாகூர் ஏரி சுற்றுலாத் தலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஏரிக் கரையோரத்தில் சுமார் 3,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்ட ஆளுநர் கிரண் பேடி, இரண்டு வாரத்திற்கு முன்பு அதனை துவக்கி வைத்திருந்தார். இந்த நிலையில் ஏரிக்கரையின் ஒரு பகுதியில் இன்று (செப்டம்பர் 14) மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்த கிரண்பேடி, விழாவில் பிசியாக இருந்ததால் தனது செல்போனை தவறவிட்டுவிட்டார்.

யாருக்கோ போன் செய்வதற்காக செல்போனை தேடும்போது செல்போன் காணாததால் பதட்டமானவர், தனது பாதுகாவலர்கள் மூலமாக செல்போனை தேடச்சொன்னார். அவர்கள் அலைந்து திரிந்து தேடியும் கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் ஆளுநரின் செல்போனை காணவில்லை எனவும், செல்போனை யாராவது எடுத்தாலோ, பார்த்தாலோ உடனே எடுத்துவந்து கொடுக்கவும் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

அடுத்த 20 நிமிடத்தில் காணமல்போன ஆளுநரின் செல்போன் கிடைத்துவிட்டது. ஆனால், செல்போன் உடைந்த நிலையில், மாட்டு வண்டி ஏறி முற்றிலும் சேதமாகிய நிலையில் கிடைத்தது. அதனைப் பெற்றுக்கொண்ட ஆளுநர் கிரண் பேடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

சனி, 14 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon