மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 23 பிப் 2020

இதுதான் இந்தியா!

இதுதான்  இந்தியா!

சமூக வலை தளங்களில் சில புகைப்படங்களை வெளியிட்டு இரு பிரிவுகளுக்கிடையே பதற்றத்தையும் பகையையும் உண்டாக்குகிற பல சம்பவங்களைப் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன கண்களுக்கு, இந்த போட்டோ வரவேற்கத்தகுந்த ஆறுதலையும் நிம்மதியையும் தருகிறது.

தெற்கு குஜராத் பகுதியில் இருக்கும் தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்திலிருக்கும் சில்வாசா என்ற பகுதியில் செப்டம்பர் 10 ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், எத்தகைய நஞ்சுகள் விதைக்கப்பட்டாலும் இந்தியா என்றைக்குமே இணக்கத்தின் பக்கம்தான் நிற்கும் என்பதை பறைசாற்றுகிறது.

முகரம் பண்டிகையை ஒட்டி டாசியா என்ற பெயரில் இஸ்லாமியர்கள் ஊர்வலம் போகிறார்கள். அதே நேரம் அதே பகுதியில் இந்து மக்கள் விநாயகர் சிலையை கரைப்பதற்கான வினாயக விசர்ஜன ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். இரு ஊர்வலங்களும் ஷாகித் சௌக் என்ற இடத்தில் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்கின்றன.

அப்போது இந்துக்களும், இஸ்லாமியர்களும் தங்களுக்குள் கரம் பற்றி, கை குலுக்கி பரஸ்பர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். குறிப்பாக இரு ஊர்வலங்களிலும் செல்லும் இளைஞர்கள் தங்களுக்குள் கட்டிப் பிடித்துப் புன்னகைத்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள். இதன் பிறகு விநாயகர் ஊர்வலம் தொடர்ந்து சென்று ஆற்றில் நிறைவடைந்தது. மொகரம் ஊர்வலம் ஜூம்மா மசூதியில் சென்று நிறைந்தது.

பழைய இந்தியா, புதிய இந்தியாவெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நமக்குத் தேவை இயல்பான இணக்கமான இந்த இந்தியாதான்! வன்மத்தை பரப்பும் விஷமிகளுக்கு இடையே இந்த உண்மையை க்ளிக்கி உலவவிட்ட அந்த இந்தியருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்

வெள்ளி, 13 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon