மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 23 பிப் 2020

இனி போராட்டக் காங்கிரஸ்: சோனியா அழைப்பு

இனி போராட்டக் காங்கிரஸ்: சோனியா அழைப்பு

மத்திய அரசின் தோல்விகளைப் பற்றி மக்களிடம் வேகமாக எடுத்துச் செல்ல வேண்டும், மக்கள் பிரச்சினைக்கான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர்களுக்கு அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநிலத் தலைவர்கள் கூட்டம் நேற்று (செப்டம்பர் 12) டெல்லியில் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய சோனியா, “மத்திய அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பழிவாங்கும் அரசியலை மிக உச்சபட்சமாகச் செயல்படுத்துகிறது. இது அரசியலில் மிக அபாயமான போக்காகும். நாடு மிக மோசமான பொருளாதார நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு அதுபற்றி அக்கறை கொள்ளாமல் வேறுவிதமான செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. இதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு காங்கிரஸ் கட்சி தன்னை கடுமையான போராட்டங்களில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவில் இருந்து மீண்டு வருமா என்ற சோதனையை நாம் வென்றாக வேண்டும். இனி காங்கிரஸின் நிகழ்ச்சி நிரல்கள் எல்லாம் போராட்டங்களாக இருக்க வேண்டும். காந்தியின் 150ஆவது பிறந்தநாளை ஒட்டி அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளும் பாத யாத்திரையில் ஈடுபட வேண்டும். வீட்டுக்கு வீடு சென்று காங்கிரஸை வளர்க்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார் சோனியா காந்தி.

இந்த நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசும்போது, “நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியை நாம் எப்படி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திறமையாகக் கையாண்டோம் என்பதையும், இந்த அரசு பொருளாதார நெருக்கடி என்பதையே உணராததாக இருக்கிறது என்பதையும் நாம் மக்களிடம் விளக்க வேண்டும். நாடு கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற பிரதமரின் பேச்சு வெறும் பகல் கனவு” என்று காட்டமாக விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை டிஜிட்டல் அண்டு டிரெடிஷனல் அதாவது மின்னணு மூலமாகவும், வழக்கமான உறுப்பினர் சீட்டு மூலமாகவும் விரைவுபடுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் பேசப்பட்டது.

காங்கிரஸ் மாநில முதல்வர்கள் எல்லாம் அழைக்கப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத், சத்தீஸ்கர் முதல்வர் பூபெஷ் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.

வெள்ளி, 13 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon