மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

பிரிட்டன் விசாவில் மாற்றம் : இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு!

பிரிட்டன் விசாவில் மாற்றம் : இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு!

பிரிட்டனில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள், படிப்பு முடித்து அடுத்த இரு ஆண்டுகளுக்கு அங்கேயே வேலை தேடும் அல்லது வேலை பார்க்கும் வகையில் விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இதுவரை இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்கள் படிப்பு முடிந்தவுடன் 4 மாதங்களே தங்க முடியும். அங்குள்ள 27 பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் பைலட் திட்டத்தின் அடிப்படையில் 6 மாதங்கள் வரை தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது, தற்போது இந்த முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுப் படிப்பு முடிந்து அடுத்த இரு ஆண்டுகள் மாணவர்கள் அங்கேயே தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது, மாணவர்கள் தங்களது வேலைவாய்ப்பைத் தொடங்கவும் முழு திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்தமுறை கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டனில் அடுத்த ஆண்டு முதல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். கடந்த 2011ஆம் ஆண்டு தெரேசா மே உள்துறை செயலாளராகப் பொறுப்பேற்ற போது, படிப்பை முடித்த சர்வதேச மாணவர்கள் இரு ஆண்டுகள் அங்கேயே தங்கலாம் என்ற விசா முறையை ரத்து செய்தார். இது இந்திய மாணவர்களின் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதாவது, 2010 - 2011 இல் 51,218 ஆக இருந்த பிரிட்டனுக்கு வரும் இந்திய மாணவர் எண்ணிக்கை 55 சதவீதம் குறைந்து 2011-2012ல் 22,757 ஆக குறைந்தது. இது 2017-2018 ஆம் ஆண்டில் 15, 388 ஆக குறைந்தது. ஆனால் 2018ல் 21,881 ஆக அதிகரித்தது. தற்போது மேலும் இரு ஆண்டுகள் மாணவர்கள் தங்கலாம் என்று பிரிட்டன் பிரதமரின் அறிவிப்பின் மூலம் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் பிரதமரின் இந்த முடிவை வரவேற்பதாகத் தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் ஒன்றிய இங்கிலாந்து (NISAU) நிறுவனர் மற்றும் தலைவர் சனம் அரோரா தெரிவித்துள்ளார். இதற்காக நாங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாகப் போராடினோம். இந்தியாவில் தற்போது அதிக வேலையின்மை உள்ளது, மாணவர்கள் நல்ல வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கிறார்கள். எனவே இந்த முடிவு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 12 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon