காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று( செப்டம்பர் 12) நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த அப்பர் அகமது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை பூக்கடை சரக காவல் மாவட்டத்தில், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், 33 உதவி காவல் ஆய்வாளர்கள், 393 காவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. இதுபோன்று சென்னையில் உள்ள மற்ற காவல் மாவட்டங்களில் 791 காவல்துறை பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்த விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்தது. சென்னை போன்று தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. எனவே காவல்துறையில் நிரப்பப்படாமல் இருக்கிற அனைத்து இடங்களையும் நிரப்ப உத்தரவிட வேண்டும். அதுபோன்று காவல்துறையினரின் சுமைகளைப் போக்கும் வகையில் 2013ல் கொண்டு வரப்பட்ட காவல்துறை சீர்திருத்தச் சட்டத்தை உடனே அமல் படுத்த வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி இன்று (செப்டம்பர் 12) நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது, காவல்துறையில் காலி பணியிடங்கள் இருப்பது குறித்து பதில் அளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது,