மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

ஊழல் செய்தவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள் : மோடி

ஊழல் செய்தவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள் : மோடி

நாட்டில் ஊழல் செய்தவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பதாக ஜார்கண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்கண்டில் பல்வேறு நலத் திட்டங்களைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அம்மாநில தலைமைச் செயலக மற்றும் சட்டமன்ற கட்டிடத்தைத் திறந்து வைத்தார். அப்போது, சில முக்கிய நபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது விசாரணை அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ஊழலுக்கு எதிராகவும், முஸ்லீம் சகோதரிகளுக்கு ஆதரவாகவும், தீவிரவாதத்துக்கு எதிராகவும் நாங்கள் உறுதிமொழி எடுத்துள்ளோம். ஊழல் செய்தவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள். சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்தவர்கள் எல்லாம் இப்போது நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு கெஞ்சுகின்றனர் என்று கூறினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.15 நாள் சிபிஐ காவல் முடிந்த பின்னரும் சிதம்பரத்துக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்தது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது குறித்து பேசிய மோடி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாகிற்கு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதற்கான பணிகள் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியமைத்த முதல் 100 நாட்களில் தொடங்கப்பட்டுள்ளன. முதல் நூறு நாட்கள் என்பது டிரைலர் தான்; முழு படமும் இன்னமும் வெளியாகவில்லை.

அனைத்து வீடுகளுக்குக் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்பது தான் இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். அதேபோன்று சட்டத்தின் மூலம் முஸ்லீம் பெண்களின் உரிமை பாதுகாக்கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதல் 100 நாட்களில் தீவிரவாதத்துக்கு எதிராகக் கடுமையான சட்டத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்தோம்” என்றார்

உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான திட்டம் ஜார்கண்டில் இருந்துதான் தொடங்கப்பட்டது. அதுபோன்று தற்போது விவசாயிகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டமும் இங்கிருந்து தான் தொடங்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

வியாழன், 12 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon