மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

சிதம்பரம் காலில் விழும் கைதிகள்: திகார் நிலவரம்!

சிதம்பரம் காலில் விழும் கைதிகள்: திகார் நிலவரம்!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார். இம்மனு இன்று (செப்டம்பர் 12) விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து வரும் 23ஆம் தேதிக்குள் ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க வேண்டுமென நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணையின்போது, வீட்டில் சமைத்த உணவை வழங்க வேண்டும் என சிதம்பரம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம் சிறையில் மற்ற கைதிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ அதுதான் சிதம்பரத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என கூறிவிட்டது.

2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா திகார் சிறையில் இருந்தபோது, அவருக்கு வீட்டு உணவு வழங்குவது குறித்து சிறை கண்காணிப்பாளரே முடிவு செய்துகொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி இருந்தது, தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்துவந்தது. அதனால் ஆ.ராசாவுக்கு எளிதாக வீட்டு உணவு கிடைத்தது. ஆனால், தற்போது பாஜக ஆட்சி நடந்துவருவதாலும், அமித் ஷா இவ்வழக்கில் முக்கிய கவனம் எடுத்துக்கொள்வதாக சொல்லப்படும் நிலையிலும், சிதம்பரத்தின் கோரிக்கையானது நீதிமன்றத்திலேயே நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இன்றோடு 7 நாட்கள் ஓடிவிட்டது. முதல் நான்கு நாட்கள் இறுக்கமான முகத்துடன் இருந்துவந்தவர், தற்போது அவ்வப்போது புன்னகைக்க ஆரம்பித்திருப்பதாக சிறை கண்காணிப்பாளர் வட்டாரங்கள் தகவல் சொல்கிறது. வந்த நாள் முதல் உணவு விஷயத்தில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவ்வப்போது டீ மட்டும் கேட்டு குடிக்கும் ப.சிதம்பரம், சைவ உணவுகளையே கேட்டு சாப்பிடுகிறார். அதுவும் மிகவும் குறைந்த அளவே உணவு எடுத்துக் கொள்கிறார்.

சில கைதிகள் திடீரென சிதம்பரம் காலில் விழுந்து ஆசிர்வாதம் கேட்பது அவருக்கு அவ்வப்போது அதிர்ச்சியையும் அளிக்கிறது. விழுபவர்களும் கார்த்தி பெயரைச் சொல்வதால் அவருக்கு மேலும் குழப்பம். இந்தி தெரியாததால் யார் இவர்கள் என்று சிறை ஊழியர்களிடம் சிதம்பரம் கேட்கிறார். ஊழியர்களும் கைதிகளிடம் விசாரித்து இவர்கள் உங்கள் மகன் கார்த்திக்கை தெரிந்தவர்கள்தான் என்று தெளிவுபடுத்துகிறார்கள்.

சிதம்பரத்தை கார்த்தி பார்த்துவிட்டு போனாலே சற்று குழப்பத்துடனே இருக்கிறார். எங்களுக்கே இது புதிராக இருக்கிறது. சந்திக்க வருபவர்கள் பெரும்பாலும் இன்னும் ஒரு வாரத்தில், 10 நாளில் விடுதலையாகி விடுவீர்கள் என்றுதான் ஆறுதல் கூறுவார்கள். ஆனால், ‘சிறையிலிருந்து இப்போது வெளியில் வர முடியாது. மோடியும் அமித் ஷாவும் வழக்கின் போக்கை தினம் தினம் கேட்கிறார்களாம்’ என கார்த்தி சாதாரணமாக சொல்கிறார்.

சிதம்பரம், ‘உன் பெயரைச் சொல்லி என் காலில் விழுகிறார்களே. அவர்களை உனக்குத் தெரியுமா?’ என கார்த்தியிடம் கேட்டபோது, அவரோ சிரித்துக்கொண்டே, ‘நீங்கள் வழக்கறிஞர் தொழிலை மட்டும் தீவிரமாகப் பார்த்தீர்கள். நான் எல்லோரிடமும் பழகிக் கொண்டிருக்கிறேன்’ என சொல்ல அவர் பதிலேதும் சொல்லவில்லை.இப்படியாகத்தான் இருக்கிறது மத்திய நிதித் துறை, உள் துறை அமைச்சராக இருந்த உச்ச நீதிமன்றத்திலேயே பெயர் சொல்லும்படியான மூத்த வழக்கறிஞரான ப.சிதம்பரத்தின் சிறை நாட்கள்.

.

வியாழன், 12 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon