மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 21 செப் 2019

அண்ணா சாலை டிராஃபிக்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

அண்ணா சாலை டிராஃபிக்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

மெட்ரோ பணிகளுக்காகக் கடந்த 7 ஆண்டுகளாக ஒரு வழிச் சாலையாக இருந்த அண்ணா சாலை இன்று முதல் இரு வழிச் சாலையாக மாற்றப்பட்டு, அதற்கான சோதனை ஓட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அண்ணா சாலை பகுதியில் மெட்ரோ பணிக்காக 2012ஆம் ஆண்டு ஒரு வழிச் சாலையாக மாற்றப்பட்டது. அண்ணாசாலை ஜி.பி. ரோடு சந்திப்பு முதல் ஒயிட்ஸ் ரோடு வரை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. மெட்ரோ பணிகள் முழுவதுமாக தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் இருவழிப் பாதையாக மாற்றப் போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக இன்றும் நாளையும் (செப்டம்பர் 11,12) சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. அண்ணாசாலை ஒயிட்ஸ் ரோடு சந்திப்பிலிருந்து வெலிங்டன் சந்திப்பு வரை இருவழிப் பாதையாக மாற்றப்பட்டு சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது. பூசணிக்காய் உடைத்து இருவழிச்சாலையில் போக்குவரத்தை போலீசார் தொடங்கி வைத்தனர். இரு வழி சாலையாக மாற்றப்பட்டதை அடுத்து வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இருவழிச் சாலைக்கான சோதனை ஓட்டம் தொடங்கியுள்ள நிலையில், சில போக்குவரத்து மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று (செப்டம்பர் 10) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதன்படி, ”அண்ணா சாலையில் ஒயிட்ஸ் ரோடு சந்திப்பிலிருந்து வெலிங்டன் சந்திப்பு வரை இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

*தற்போது ஜி.பி.ரோட்டில் நடைமுறையில் உள்ள ஒருவழிப்பாதை மாற்றியமைக்கப்பட்டு, ராயப்பேட்டை மணிக்கூண்டிலிருந்து வாகனங்கள் வெலிங்டன் சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுகிறது. மாறாக வெலிங்டன் சந்திப்பிலிருந்து ராயப்பேட்டை மணிகூண்டு வரை வாகனங்கள் செல்லத் தடை செய்யப்படுகிறது.

*ஒயிட்ஸ் ரோடு இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

*ராயப்பேட்டையில் மணிக்கூண்டிலிருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலை நோக்கியும், அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டை நோக்கியும் ஒயிட்ஸ் ரோட்டில் அனுமதிக்கப்படுகிறது.

*ஸ்மித் ரோடு ஒரு வழிப்பாதையாகவே முன்பு இருந்தது போன்றே ஒயிட்ஸ் ரோடு சந்திப்பிலிருந்து அண்ணாசாலை செல்ல அனுமதிக்கப்படுகிறது.

*அண்ணா மேம்பாலத்திலிருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகனப் போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

*அண்ணா சிலையிலிருந்து தேனாம்பேட்டை நோக்கிச் செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி மற்றும் டி.வி.எஸ் வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லலாம்.

*அண்ணா சிலையிலிருந்து பின்னி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் செல்லலாம்.

*பாரதி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.பி.ரோடு மற்றும் ஒயிட்ஸ் ரோடு வழியாக அண்ணா சாலை சென்றடையலாம்.

*ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலிருந்து (வெஸ்ட் காட் ரோடு) அண்ணா சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு அடைந்து ஒயிட்ஸ் ரோடு மற்றும் ஜி.பி.ரோடு வழியாகச் செல்லலாம்.

*பின்னி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணா சாலை மற்றும் அண்ணா மேம்பாலம் செல்லலாம்.

*பின்னி சாலையிலிருந்து பாரதி சாலை செல்ல அண்ணா சாலை பட்டுலாஸ் சாலை வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி ஒயிட்ஸ் ரோடு மற்றும் ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாகச் செல்லலாம்.

*பின்னி சாலையிலிருந்து ஒயிட்ஸ் ரோடு செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணா சாலை, பட்டுலாஸ் சாலை வழியாகச் சென்று ஒயிட்ஸ் ரோட்டிற்குச் செல்லலாம்.

*கிரீம்ஸ் சாலையிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்ல வேண்டிய வாகனங்கள் அண்ணா சாலை மற்றும் ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் U Turn and Right Turn எடுத்து அண்ணா மேம்பாலம் மற்றும் ஒயிட்ஸ் சாலை செல்லலாம்.

*அண்ணா சாலையிலிருந்து ஸ்மித் ரோடு வழியாக ஒயிட்ஸ் ரோடு செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது.

*ஒயிட்ஸ் சாலையிலிருந்து அண்ணா சாலை செல்லும் வாகனங்கள் திரு.வி.க. சாலையில் இடதுபுறம் திரும்பி பின்னர் சத்யம் தியேட்டர், கான்டான் சுமித் சாலை சந்திப்பு, பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம்” என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதன், 11 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon