மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

திமுகவில் தினகரன்: அமைச்சர் ஆருடம்!

திமுகவில் தினகரன்: அமைச்சர் ஆருடம்!

தினகரன் விரைவில் திமுகவில் இணையப் போகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமெரிக்கா சென்றிருந்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று சென்னை திரும்பினார். அதன்பிறகு சொந்த மாவட்டமான விருதுநகருக்கு இன்று (செப்டம்பர் 11) சென்ற அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, “பால்வளத் துறையில் புதிய யுக்திகளை கையாள்வது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள பால் பண்ணைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அதுபோலவே இங்கும் செயல்படுத்தவுள்ளோம். முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை பல்வேறு தரப்பிலும் பாராட்டுகிறார்கள். ஆனால், பொறாமையின் காரணமாக ஸ்டாலின் விமர்சிக்கிறார்” என்று தெரிவித்தார்.

அமமுகவிலிருந்து புகழேந்தி விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே என்ற கேள்விக்கு, “அமமுகவிலிருந்து புகழேந்தி மட்டுமல்ல தினகரனே தானாக விலகிச் சென்றுவிடுவார். அமமுகவில் இருந்த அனைவரும் அதிமுகவில் இணைந்துவிட்டனர். அங்கு யாருமே இல்லை. ஜெயலலிதா இறப்பதற்கு முன்பாக அமமுக என்ற ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்துங்கள் என்று எங்கேயும் சொல்லவில்லை. தனக்குப் பிறகும் 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருக்கும் என்றுதான் தெரிவித்தார். தினகரன் நாடகத்தை யாரும் நம்ப மாட்டார்கள்” என்று பதிலளித்தார்.

அதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியிடம், அமமுகவினர் திமுகவில் சேருவதில் தவறில்லை என தினகரன் கூறுகிறாரே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. “தினகரன் அமமுகவிலிருந்து விலகி வேறு கட்சியில் இணையப் போகிறார். திமுகவில் சென்று இணையப் போகிறார். திமுகவுக்கு செல்வதில் தவறில்லை என்று அவரே கூறுகிறார் அல்லவா. எனவே அப்படித்தான் எனக்குத் தெரிகிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது திமுகவுக்கு செல்வதில் தவறில்லை என்று தினகரன் கூறியிருப்பாரா?” என்று செய்தியாளர்களிடமே மீண்டும் கேள்வி எழுப்பினார் ராஜேந்திர பாலாஜி.

புதன், 11 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon