மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

ஓவர்லோடு: லட்சத்தில் அபராதம்!

ஓவர்லோடு: லட்சத்தில் அபராதம்!

அதிக எடை ஏற்றி வந்ததாகக் கூறி ராஜஸ்தான் லாரி உரிமையாளருக்கு டெல்லியில் ரூ. 1,41,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை ஒடிசாவைச் சேர்ந்த ஓட்டுநர் அதிகபட்சமாக 70,000 ரூபாய் அபராதம் செலுத்திய நிலையில் தற்போது ராஜஸ்தான் லாரிக்கு உச்சபட்ச அபராத தொகை விதிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல், புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது. அன்று முதல் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அதிகளவு அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் காரில் சென்றாலும் ஹெல்மெட் அணிவது, ஹெல்மெட்டை சுற்றி தேவையான ஆவணங்களை ஒட்டி கொள்வது போன்ற சம்பவங்களும் நடைபெறுகின்றன. கடந்த வாரம் ஒடிசாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரூ.70,000 அபராதம் செலுத்தியிருந்தார்.

இந்நிலையில் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட லாரி உரிமையாளருக்கு ரூ.1,41,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர் கடந்த 9 ஆம் தேதி டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் அபராத தொகையைச் செலுத்தி ரசீது பெற்றுள்ளார். குறிப்பிட்ட அளவை விட கூடுதல் பாரம் ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. புதிய போக்குவரத்து சட்டத் திருத்தத்தின் படி வாகனங்களில் குறிப்பிட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றியிருந்தால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கூடுதலாக ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.2 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். முன்னதாக, அதிக பாரம் இருந்தால் ரூ.2 ஆயிரம் மற்றும் ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கும் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 11 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon