மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

ஒலிம்பிக் ஜோதி பற்றி தீ: மாணவன் பலி!

ஒலிம்பிக் ஜோதி பற்றி தீ: மாணவன் பலி!

விளையாட்டுப் போட்டியின்போது ஒலிம்பிக் ஜோதியிலிருந்து தீ பிடித்ததில் 12ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவர் உயிரிழந்ததை அடுத்து பள்ளி முன்பு போராட்டம் நடைபெறாமல் இருக்க நேற்று முதல் பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இயங்கிவரும் ராமகிருஷ்ணா மடத்திற்குச் சொந்தமான ராமகிருஷ்ணா மிஷன் மெட்ரிக் பள்ளியில் கடந்த மாதம் 30ஆம் தேதி விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டிருக்கிறது. போட்டிகள் துவங்குவதற்கு முன்னதாக ஒலிம்பிக் ஜோதியை ஏந்திக்கொண்டு விளையாட்டு மைதானத்தைச் சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி பள்ளியில் பயின்று வந்த விக்னேஷ் என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திக்கொண்டு மைதானத்தில் ஓடி வந்திருக்கிறார்.

அந்த ஜோதிக்கு எரிபொருளாக பெட்ரோல் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மாணவர் ஓடும்போது காற்றின் வேகத்தில் தீ அவர் மீது பட்டு உடல் முழுவதும் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது முகம் மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாணவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏழு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விக்னேஷ் கடந்த ஞாயிறு அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பள்ளியில் விளையாட்டின்போது தீ விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்த நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் துக்கம் கூட விசாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மாறாகப் பள்ளி சார்பில் விக்னேஷின் குடும்பத்துக்கு நிதி வழங்கியதாக வதந்தி கிளம்பியிருக்கிறது. இது மேலும் எங்களைத் துக்கத்தில் ஆழ்த்தியிருப்பதாக மாணவரின் தந்தை முருகன் வேதனை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு என் மகன் கல்லூரிக்குச் செல்வான் என கனவு கண்டுகொண்டிருந்தேன். தற்போது அவனை இழந்து நடுத் தெருவில் நிற்கிறேன். எனது மகனின் இறப்பை அடுத்து இதுவரை பள்ளி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கண்ணீர் மல்க கூறுகிறார் முருகன்.

மாணவர் உயிரிழந்த நிலையில் போராட்டம் நடைபெறலாம் எனக் கருதி பள்ளி நிர்வாகம் நேற்று முதல் மூன்று நாட்களுக்குப் பள்ளிக்கு விடுமுறை அளித்திருக்கிறது. அதுமட்டுமின்றி பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அத்துடன் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாணவர்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

திங்கள், 9 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon