மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 7 ஜூலை 2020

நிர்மலாவிடம் தமிழக தொழிலதிபர்கள் நேரில் குமுறல்!

நிர்மலாவிடம் தமிழக தொழிலதிபர்கள் நேரில் குமுறல்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 100 நாட்களில் மத்திய அரசு சாதித்தது என்ன என்பது குறித்து சென்னையில் இன்று (செப்டம்பர் 10) செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார்.

இச்சந்திப்பில், காஷ்மீர் விவகாரம் முதல் சந்திராயன் 2 வரை இந்த 100 நாட்களுக்குள் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கூறினார்.

ஆர்டிக்கள் 370

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், “தேர்தல் வாக்குறுதிப்படி 370 சட்டப்பிரிவு நீக்கம் செய்யப்பட்டது. இது முதன் முதலாக நாங்கள் ஜனசங்கம் ஆக தொடங்கியதில் இருந்தும், பாரதிய ஜனதா கட்சியாக 1980ஆம் ஆண்டு மாறியதிலிருந்தும், ஏன், இப்போது வரையும் எங்களது கொள்கையாகும். ஒவ்வொரு தேர்தலின் போதும், பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு வந்த வாக்குறுதி தான் இது.

வாக்குறுதி கொடுத்து விட்டோம் என்பதற்காக மட்டும் இதை நாங்கள் அமல்படுத்தவில்லை. இரண்டு பெரும்பான்மையோடு ராஜ்ய சபாவிலும், லோக் சபாவிலும் இச்சட்டம் நீக்கப்பட்டது.

உண்மையில், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு 370 சட்டப்பிரிவு உதவிகரமாக இல்லை. தற்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான இடஒதுக்கீடு ஜம்மு-காஷ்மீரில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தேசிய மகளிர் ஆணையமும் செயல்படாமல் இருந்தது. இந்த சீர்திருத்தத்தால் உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். நிறைய முதலீட்டாளர்கள் வருகை புரிவர்” எனக் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜக அரசின் 100 நாட்கள் குறித்து குறிப்பிடுகையில், “பாஜக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், வேதனை மிகுந்த நாட்களாகத்தான் இவை கடந்துள்ளன. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறுபான்மை உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான முடிவுகளையும் சட்டங்களையும் கொண்டுவருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

பொருளாதாரம்

நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், “சிறிய வங்கிகள் இணைப்பால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். 5 லட்சம் கோடி அளவிற்கு பொருளாதாரம் மேம்படும். இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர ஜிஎஸ்டியும் உதவும்.

ஆட்டோமொபைல் துறை சரிவுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஜிஎஸ்டி விதிப்பை 28% சதவிகிதத்திலிருந்து இருந்து 18 சதவிகிதமாக குறைக்க வலியுறுத்துகின்றனர். ஆனால், ஜிஎஸ்டி முடிவை நான் மட்டுமே தனித்து எடுக்க இயலாது. இது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைவு என்பது வளர்ச்சிச் சுழற்சியின் ஒரு பகுதியாகும், அதற்கு பதிலளிக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் விழிப்புடன் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

பயணிகள் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து பிரிவுகளிலும் வீழ்ச்சியை நோக்கி இந்தத் துறை தொடர்ந்து சரிந்து வருவதாக இந்திய வாகன உற்பத்தி சங்கம் (SIAM) நேற்று(செப்டம்பர் 9) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 20ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலத்தை எதிர்நோக்கியும், இந்த கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி விதிப்பு குறையும் என்ற நம்பிக்கையுடனும் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் காத்திருக்கின்றன. மறுபுறம், அரசாங்க வருவாயில் பெரும் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்பதால் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பை பொருத்தக் குழு( fitment committee) எதிர்க்கிறது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி இன்று காலை பொருளாதார மந்தநிலை குறித்து மத்திய அரசை விமர்சித்து தனது டிவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். அதில்,“இந்திய தேசத்தின் பொருளாதாரம் ஆழ்ந்த படுகுழியை நோக்கி விழுந்துள்ளது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. உற்பத்தி மற்றும் போக்குவரத்தில் ஏற்பட்ட சரிவு சந்தையில் நம்பிக்கையிழப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போது தான் மத்திய அரசு விழித்துக்கொள்ளப் போகிறது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவம் & விவசாயம்

41 லட்சம் பேர் இதுவரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் உயர் சிகிச்சை பெற்று உள்ளனர். 16,000 மருத்துவமனைகள் ஆயுஷ்மான் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குறைந்த கட்டணத்தில் ஏழைகள் உயர்தர சிகிச்சையை பெறுகின்றனர். ஃபிட் இந்தியா திட்டம் மூலம் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊக்குவிக்கப்படும்.

விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு 3 தவணையாக மொத்தம் 6,000 ரூபாய் அளிக்கப்படுகிறது. இது தவிர ஓய்வூதியமாக 3,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

சந்திராயன் 2

சந்திரயான் 2 திட்டத்தில் 99.9% வெற்றி கிடைத்துள்ளது. இஸ்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இக்கூட்டம் முடிந்ததும் நிர்மலா சீதாராமனை தமிழகத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனர்கள், சக்கரை ஆலை நிறுவனர்கள், சிறு தொழில் நிறுவனர்கள் சந்தித்துள்ளனர். அச்சந்திப்பில், பில்டர்கள், ‘தற்போது நிலவி வரும் கடும் நிதி நெருக்கடியால் வீடுகள் விற்பனை சரிந்துள்ளது. அதனால், வங்கிகளில் லோன் கட்டுவதற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கடன் அடைக்க போதுமான கால அவகாசத்தை வங்கிகள் கொடுப்பதில்லை என்றும், அதிக வட்டி உள்ளிட்ட காரணங்களை கூறியும் குமுறியுள்ளனர் தொழிலதிபர்கள்.

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon