மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

உணவில் புழு : முருகன் இட்லி கடை உரிமம் ரத்து!

உணவில் புழு : முருகன் இட்லி கடை உரிமம் ரத்து!

அம்பத்தூரில் இயங்கி வந்த பிரபல முருகன் இட்லி கடை நிறுவனத்தின் உரிமத்தைத் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 10) தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

மதுரையில் 1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முருகன் காபி நிலையம் பெயர் மாற்றப்பட்டு முருகன் இட்லி கடை என்ற பெயரில் தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. சென்னையில் 15க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. சிங்கப்பூரிலும் இதன் கிளை செயல்பட்டு வருகிறது. பிரபல சைவ உணவகமான முருகன் இட்லி கடைக்கென்று தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் முருகன் இட்லி கடையின் பாரிஸ் கிளையில் சாப்பிட்ட போது உணவில் புழு இருந்ததாக உணவு பாதுகாப்புத் துறைக்கு வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் உணவு விநியோகிக்கப்படுவதுடன், உணவு தயாரிக்கத் தேவையான பொருட்களையும் வழங்கி வரும் அம்பத்தூர் முருகன் இட்லி கடை நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அம்பத்தூர் கடையில் நடத்திய சோதனையின் போது, கடைக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ள போதிலும் அது அதற்கான இடத்தில் வைக்கப்படவில்லை. சரியான சுத்தம் கடைப்பிடிக்கப்படவில்லை, அத்துடன் பூச்சி கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்ற தவறியது என முருகன் இட்லி கடை பல்வேறு விதிமுறைகளை மீறியது தெரியவந்ததாக உணவு பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, அக்கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. திருவள்ளூர் உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் நிறுவனம் இன்று முதல் உணவு தயாரித்து விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 பிரிவு 32 மற்றும் ஒழுங்கு முறைகள் 2011, 2.1.8(1) இன் படி நிறுவனத்தின் உரிமம் எண் 12417023000521 தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிடுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon