மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

இந்தியா-நேபாளத்தை இணைக்கும் பைப்லைன்!

இந்தியா-நேபாளத்தை இணைக்கும் பைப்லைன்!

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு குழாய் மூலமாக பெட்ரோலியப் பொருட்கள் எடுத்துச் செல்லும் திட்டம் துவங்கி வைக்கப்பட்டது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திற்கு நமது நாட்டிலிருந்து பெட்ரோலியப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பெட்ரோலியப் பொருட்களை டேங்கர் லாரிகள் மூலமாக நேபாளநாட்டிற்கு எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் அவ்வாறு எடுத்துச் செல்லப்படும்போது அதிக அளவில் பொருட்செலவு ஏற்பட்டதோடு பாதுகாப்பு குறித்த அச்சமும் நிலவி வந்தது. இந்த லாரிகளின் போக்குவரத்து வாடகைக்காக மட்டும் ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு வந்தது.

இதற்கு தீர்வு காணும் விதத்தில் இந்தியா-நேபாளம் இடையே, 69 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய் மூலம் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு செல்லும் திட்டம், நேபாள பிரதமருடன் இணைந்து, இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. இதற்காக 69 கிலோமீட்டர் தூரத்திற்கு, 325 கோடி ரூபாய் செலவில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் குறித்த யோசனைகள் 1996ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டிருந்த போதிலும், 2014 ஆண்டு பிரதமர் மோடி காத்மண்டு சென்றபோது தான் செயல்வடிவம் பெற ஆரம்பித்தது. தொடர்ந்து கடந்த வருடம் பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ஆகியோரால் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள மோத்திஹரியில் இருந்து, நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் உள்ள அம்லேக்கஞ்ச் வரையிலான 69 கிலோமீட்டர் தூரத்திற்கு பெட்ரோலியக் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக டெல்லியிலிருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், காத்மண்டு நகரில் இருந்து நேபாளப் பிரதமர் சர்மா ஒலியும் இணைந்து இத்திட்டத்தை இன்றைய தினம் (செப்டம்பர் 9) தொடங்கி வைத்தனர்.

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon