மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 18 நவ 2019

சட்டவிரோத பேனர்: அச்சகத்துக்குச் சீல்!

சட்டவிரோத பேனர்: அச்சகத்துக்குச் சீல்!

சென்னையில் அனுமதி இன்றி சட்ட விரோதமாகப் பேனர்கள் வைக்கப்பட்டால் அதை அச்சடித்துக் கொடுக்கப்பட்ட அச்சகத்துக்குச் சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பேனர்களுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தாலும், பொது இடங்களில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைப்பது தொடர்கதையாகி வருகிறது. சட்டவிரோதமாகப் பேனர் வைப்பவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது பேனர் விவகாரத்தில் விதிகளை மேலும் இறுக்கியுள்ளது சென்னை மாநகராட்சி. அதன்படி அனுமதி பெறாத பேனர்களை அச்சடித்துத் தந்தால் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1 முதல் 15 வரையிலான பகுதிகளில் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு 326(BB)யின்படி மாநகராட்சி ஆணையரின் உரிய அனுமதி பெற்று விளம்பரப் பதாகைகள் (Digital Banners) மற்றும் விளம்பரத் தட்டிகள் (Placards) அமைக்கப்பட வேண்டும்.

அதனடிப்படையில் அனுமதி பெறுபவர்களின் விளம்பரப் பதாகைகளை அச்சிடும் போதும், அவ்விளம்பரப் பதாகைகளின் கீழ்ப்பகுதியில் அனுமதி எண், அனுமதி அளிக்கப்பட்ட நாள், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை, அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம், அனுமதிக்கான கால அவகாசம், அச்சகத்தின் பெயர் ஆகியவற்றை Tamil Nadu Urban Local Bodies (Permission for Erection of Digital Banners and Placards) Rules, 2011ல் விதி எண்.3(7) தெரிவித்துள்ள அடிப்படையில், அனைத்து அச்சகங்களும் அச்சடிக்கும் போது தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என 21.02.2019 அன்று நடைபெற்ற டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நீதிமன்றத்தின் அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகளை மீறி சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு எண்.287ன் படி பெருநகர சென்னை மாநகராட்சி தொழில் உரிம விதிகளுக்கு மாறாக, உரிமம் பெறாமல் பதாகைகள் அமைக்கும் நபர்களுக்கு அச்சடிக்கும் பணியினை மேற்கொள்ளும் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், மூடி சீல் வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon