மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 16 ஜன 2021

ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்களா?

ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்களா?

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, ஒரே தண்டவாளத்தில் எதிரெதிர் திசையில் இரு ரயில்கள் மோதுவது போல் வந்ததாக வெளியான தகவல் வதந்தி என்று ரயில்வே விளக்கமளித்துள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் அருகே சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கு குடிநீர் ஏற்ற வந்த ரயிலும் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் வரை செல்லக்கூடிய மின்சார ரயிலும் ஒரே மார்க்கத்தில் நேருக்கு நேராகச் சென்றதால் 100 அடி தூரத்தில் நிறுத்தப்பட்டது. இரண்டும் ஒரே திசையில் வந்ததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர் என இன்று காலை செய்தி வெளியானது. இந்த தகவல் வதந்தி என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

சிக்னல் கோளாறு காரணமாக, காட்பாடி ரயில் நிலையத்திற்கு 3 கிலோமீட்டருக்கு முன்னால் குடிநீர் கொண்டு வரும் ரயிலானது நின்றது. சிறிது நேரத்தில் அவ்வழியாக மின்சார ரயிலும் வந்து கொண்டிருந்தது. முன்னாள் தண்ணீர் ரயில் நின்று கொண்டிருப்பதை அறிந்து பின்னால் வந்த மின்சார ரயில் ஓட்டுநர் சிக்னலை பார்த்து ரயிலை நிறுத்தியுள்ளார்.

ரயில் நின்றதால் அதில் பயணித்த பயணிகள் கீழே இறங்கியுள்ளனர்.அப்போது தண்ணீர் கொண்டு செல்லும் ரயிலில் இருபுறமும் இஞ்சின் இருப்பதை அறியாமல் சிலர் இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்ததாகப் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் சிக்னல் கோளாறு காரணமாகவே இரு ரயில்களும் ஒன்றன்பின் ஒன்றாக நின்றதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon