மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

நாடெங்கும் வழக்கறிஞர்கள் போராட்டம்!

நாடெங்கும் வழக்கறிஞர்கள் போராட்டம்!

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று (செப்டம்பர் 10) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் எனது இடமாற்றம் மற்றும் ராஜினாமா குறித்து விவாதிக்க விரும்பவில்லை என்று தஹில் ரமணி தெரிவித்திருக்கிறார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி, 3 நீதிபதிகள் கொண்ட மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராகத் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தைத் தொடர்ந்து நேற்று முதல் தஹில் ரமணி தலைமையிலான முதல் அமர்வு முன்பு எந்தவித வழக்குகளும் பட்டியலிடப்படவில்லை. இரண்டாவது நாளாக இன்றும் வழக்குகள் பட்டியலிடப்படாத நிலையில், அந்த வழக்குகள் நீதிபதி துரைசாமி முன்பு பட்டியலிடப்படும் என்று நீதிமன்ற பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை பணியிட மாற்றம் செய்வது நியாயமற்றது எனக் கூறி தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் அறிவித்தபடி இன்று (செப்டம்பர் 10) நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்களும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். சென்னை, மதுரை மட்டுமின்றி நெல்லை, சேலம், ஸ்ரீவில்லிப்புத்தூர் என தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களும் தலைமை நீதிபதிக்கு ஆதரவாகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஸ்ரீவில்லிப்புத்தூரில் 500 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, ”இந்தியாவின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான பெண் நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லை. தலைமை நீதிபதிக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். உச்ச நீதிமன்ற கொலிஜியம் வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கிறது. தலைமை நீதிபதி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழுவைச் சந்திக்கவுள்ளோம். தஹில் ரமணி சுயமரியாதைக்காகத் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பாராட்டுக்குரியது என்றாலும் அவர் தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

”இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதியின் கருத்தைக் கேட்க அவரை அணுகிய போது’நான் இடமாற்றம் அல்லது ராஜினாமா குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவோ அல்லது இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கவோ விரும்பவில்லை” என்று அவர் கூறியதாக தி இந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon