மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 அக் 2020

14 நாட்களில் தெலுங்கு: தமிழிசை

14 நாட்களில் தெலுங்கு: தமிழிசை

தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் செப்டம்பர் 8ஆம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நேற்று(செப்டம்பர் 9) ராஜ் பவன் சென்ற அவர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் உரையாடினார்.

அப்போது தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், தெலுங்கு மொழியை இன்னும் பதினான்கு நாட்களில் கற்றுக் கொள்வேன் என்றும், அம்மாநில மக்களுடன் அவர்களது சொந்த மொழியில் உரையாட விரும்புகிறேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆளுநராக பதவியேற்பதற்கு முன்பே அப்பதவி குறித்தும், தெலங்கானா மாநிலத்தின் சமூக-பொருளாதார சிக்கல்கள் குறித்தும் தான் கற்றறிந்ததாக குறிப்பிட்டுள்ளார் ஆளுநர் தமிழிசை. அடிப்படையில் தான் ஒரு மருத்துவர் என்பதால், ராஜ் பவனில் உள்ள பணியாளர்கள், அதிகாரிகள் அனைவரும் அவர்களது உடல் நலத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், தினமும் தான் யோகா பயிற்சி செய்வதாகவும், தவறாமல் நடைப்பயிற்சியை பின்பற்றுவதாகவும் கூறினார். ராஜ் பவனில் உள்ள பணியாளர்களும் அதனை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார் ஆளுநர் தமிழிசை அனைரிடமும் தான் நட்போடு பழக விரும்புவதாகவும், கொடுக்கப்பட்டுள்ள கடமைகளை சிறு பிழை இல்லாமல் சிறந்த முறையில் அனைவரும் செயல்படுத்த வேண்டுமென்ற தன் விருப்பத்தையும் பகிர்ந்துள்ளார் தமிழிசை.

அதன் பின்னர், ராஜ் பவனில் உள்ள நூலகத்திற்கு சென்ற ஆளுநர் தமிழிசை, தனது சொந்த நூலகத்தில் உள்ள 5,000 புத்தகங்களை விரைவில் இங்கே கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon