மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

விழுப்புரம்: கோயில் திருவிழா... சாதிப் பதற்றம்!

விழுப்புரம்: கோயில் திருவிழா... சாதிப் பதற்றம்!

விழுப்புரம் மாவட்டத்தில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல், சாதிக் கலவரத்தில் முடிந்து, மாவட்டமே பதற்றத்தில் உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோட்டம், மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொம்பூர் கிராமத்தில் ஒரு சமூகத்தினர் கோயில் திருவிழா செய்வதற்கு, மற்றொரு சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 9ஆம்) தேதி, இரவு கோயில் திருவிழாவின்போது ஒரு சமூகத்தினர் மறித்ததால் இரு சமூகத்தினருக்கும் மோதல் ஏற்பட்டு கல், கம்பு போன்ற ஆயுதங்களால் தாக்கிக்கொண்டார்கள்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ராமநாடு மாவட்டத்துக்கு இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சி தொடர்பான பாதுகாப்புப் பணிக்குச் சென்றதால், கடலூர் மாவட்ட எஸ்.பி ஶ்ரீஅபினேவ்,நள்ளிரவு 12.00 மணிக்கு ஸ்பாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். கலவரத்தின் பின்னணியைப் பற்றி காவல் துறையில் கேட்டோம்.

“பட்டியல் சமூகத்தினர் கோயில் திருவிழா செய்தனர், மாற்றுச் சமூகத்தினரான வன்னியர்கள் எங்கள் வீதி வழியாக ஊர்வலம் வரக் கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது என்று வலியுறுத்தி வந்தனர். திருவிழா காரர்கள் சாமி ஊர்வலமாக வந்தபோது வாண வேடிக்கைகள் விட்டபடி வந்ததால் இரு சமூகத்தினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டு பிறகு கல் வீசி தாக்கிக்கொண்டார்கள்.

இதனிடையே சில சமூகவிரோதக் கும்பல் கரும்புக்கு தீ வைத்ததால் இரு தரப்புக்குமான மோதல் அதிகரித்துவிட்டது, காவல் துறையினருக்குக் காலதாமதமாகத் தகவல் தெரிந்து ஸ்பாட்டுக்கு வந்தும் போதுமான போலீஸார் இல்லாததால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதன் பின் போலீஸார் அதிகமாகக் குவிக்கப்பட்டு தற்போது பொம்பூர் கிராமத்தை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்” என்கிறார்கள்.

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon