மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

நானும் அபராதம் செலுத்தினேன்: கட்கரி

நானும் அபராதம் செலுத்தினேன்: கட்கரி

போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது குறித்த கவலைகள் வாகன ஓட்டிகளிடையே அதிகரித்து வரும் நிலையில், அதிவேகத்தில் சென்றதற்காகத் தனக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராதக் கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது. புதிய சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது முதல் வாகன ஓட்டிகள் அதிகளவு அபராதத் தொகையைச் செலுத்தி வருகின்றனர். வாகன விலையை விட அபராதத் தொகை அதிகமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒடிசாவில் அசோக் ஜாதவ் என்ற லாரி ஓட்டுநருக்கு, நேற்று முன்தினம் சாலை விதிகளை மீறியதாக 86,000 ரூபாயை போலீசார் அபராதமாக விதித்துள்ளனர். அதிக எடை ஏற்றுதல், அதிவேகம் என பலவிதிமீறல் குற்றச்சாட்டுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 5 மணி நேரம் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய லாரி ஓட்டுநர் ரூ.70,000த்தை அபராதமாகச் செலுத்தியிருக்கிறார். தற்போது இந்த ரசீது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதான் தற்போது வரை இந்தியாவிலேயே விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகையாகும்.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் லுங்கி கட்டியதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் லாரி ஓட்டுநர் ஒருவருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து உத்தரப் பிரதேச ஏஎஸ்பி கூறுகையில், ”மோட்டார் வாகன சட்டத்தில், ஓட்டுநர் முழுக்கால் சட்டை அணிந்திருக்க வேண்டும் என்றுள்ளது. இந்தச் சட்ட திருத்தம் 1989 முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது அபராதமானது 500 ஆக இருந்தது. சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதை அடுத்து தற்போது இந்த விதி மீறலுக்கான அபராதத் தொகை 2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என விளக்கமளித்திருக்கிறார்.

இவ்வாறு அதிகளவு அபராதம் விதிப்பது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி, ”நான் கூட அபராதம் செலுத்தியுள்ளேன், மும்பையின் பந்தா- ஓர்லியை இணைக்கும் கடல் பாலத்தில் வேகமாக வந்ததற்காக எனது பெயரில் உள்ள காருக்கு அதிகமான அபராதம் விதிக்கப்பட்டது. சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில் அபராதம் விதிக்கப்படுகிறது

சாலை விதிகளை மீறினால் மத்திய அமைச்சர்களாக இருந்தாலும் அபராதம் கட்ட வேண்டும். நாட்டில் 30 சதவிகித வாகன ஓட்டுநர் உரிமம் போலியானவை. கடுமையான அபராதங்கள் மூலம் ஊழல் அதிகரிக்கும் என்கிறார்கள். அப்படி ஒன்றும் நடைபெறாது” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 9 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon