மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 16 ஜன 2021

மோடி அரசின் 100 நாட்கள்: தலைவர்கள்

மோடி அரசின் 100 நாட்கள்: தலைவர்கள்

மோடி அரசின் முதல் 100 நாட்கள் குறித்து தமிழகத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று முதல் 100 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. தங்களது சாதனைகளாய் ஜம்மு காஷ்மீர் சிறப்புப் பிரிவு நீக்கம், நாடாளுமன்றத்தைச் சிறப்பாக நடத்தியது உள்ளிட்டவற்றை பாஜகவினர் முன்வைத்து வருகின்றனர். ஆனால், பொருளாதார மந்தநிலை, ஜிடிபி வளர்ச்சி சதவிகிதம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சிகள், 100 நாட்களில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று விமர்சித்து வருகின்றன. இதுதொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளைப் பின்வருமாறு பார்ப்போம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், கே.எஸ்.அழகிரி

மோடி அரசின் 100 நாட்கள் சாதனைகளை ஆய்வு செய்கிற போது மிகுந்த அதிர்ச்சியும், ஏமாற்றமுமே ஏற்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5ஆவது இடத்தில் இருந்த இந்தியா 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டதை நரேந்திர மோடியால் மறுக்க முடியுமா? இதற்குக் காரணம் வரலாறு காணாத பொருளாதார மந்தநிலை என்பதை எவராலும் மறுக்க முடியாது. இதனால் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு ஒரே ஆண்டில் 99 பைசா சரிந்துள்ளது.

ஆனால், நரேந்திர மோடி தமக்கு இருக்கிற சொற்பொழிவு ஆற்றலினால் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மூடி மறைப்பதைப் போல வேதனைகளின் பட்டியலுக்குப் பதிலாக சாதனைகளின் பட்டியலை அறிவித்து வருகிறார். மோடி அறிவித்திருப்பதோ சாதனைகளின் பட்டியல். ஆனால், நாட்டு மக்கள் அனுபவிப்பதோ வேதனைகளின் பட்டியல். அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற இந்தியப் பொருளாதாரத்தைச் சரிகட்டுவதில் பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் படுதோல்வி அடைந்திருக்கிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர், முத்தரசன்

மோடி அரசின் முதல் நூறு நாட்களுக்குள்ளாக எழுபது ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மோட்டார் வாகனத் தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி தொழில் தொடர முடியாமல் மூடுவிழா நடத்தியுள்ளன.

முன் எப்போதும் கண்டிராத வேலையின்மை நீடிப்பதுடன் தொழில்கள் மூடல் காரணமாக மேலும் அதிகரித்துள்ளது. வேளாண்மை, தொழில் என அனைத்தும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. ஜம்மு காஷ்மீர் மக்கள் திறந்த வெளி சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் மிக வசதியான முறையில் மூடி மறைத்துவிட்டு, பாஜக நூறு நாட்கள் விழா எடுத்து, தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறது.

விசிக தலைவர், திருமாவளவன்

பாஜக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், வேதனை மிகுந்த நாட்களாகத்தான் இவை கடந்துள்ளன. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறுபான்மை உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான முடிவுகளையும் சட்டங்களையும் கொண்டுவருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது.

திங்கள், 9 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon