மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

தலைமை நீதிபதி தஹில் ரமணி: ராஜினாமா பின்னணி!

தலைமை நீதிபதி தஹில் ரமணி: ராஜினாமா பின்னணி!

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதற்குப் பின்னால் மத்திய அரசு இருப்பதாக குற்றம் சாட்டி வழக்கறிஞர் சங்கத்தினர் தலைமை நீதிபதி தஹில் ரமணிக்கு ஆதரவாகப் போராடி வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தோடு ஒப்பிடவே முடியாத சிறிய நீதிமன்றமான மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தஹில் ரமணி ஏன் மாற்றப்பட்டார்? இந்த மாற்றத்துக்கு ஒப்புக் கொள்ள மறுத்துதான் தனது பதவியை ராஜினாமா செய்தாரா தஹில் ரமணி? மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு அப்படி என்ன உள்நோக்கம்?

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடை தேட சில சுமார் 17 வருடங்களுக்கு முந்தையை குஜராத்தில் நடந்த ஒரு வழக்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

“குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த காலத்தில் கடந்த 2002இல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்தது.

அந்த ஆண்டின் மார்ச் 3ஆம் தேதியன்று ஆமதாபாத் அருகில் உள்ள ராந்திக்பூர் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தின்போது பில்கிஸ் பானோ என்ற பெண்ணின் குடும்பத்தார் மீது ஒரு கும்பல் கொடூர தாக்குதலை நடத்தியது.

இதில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். அதில் அவரின் தாய் மட்டும் அல்ல கொல்லப்பட்டவர்களில் பில்கிஸ் பானோவின் 2 வயது குழந்தையையும் விடவில்லை. இதோடு நிற்கவில்லை , பல பிணங்களின் நடுவில் 5 மாத கர்ப்பமாக இருந்த பில்கிஸ் பானோவை அந்தக் கும்பல் கூட்டாக பலாத்காரம் செய்தது.

எனினும், பில்கிஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற 6 பேர் அந்தக் கும்பலிடம் இருந்து பலத்த காயத்தின் நடுவே தப்பியோடி விட்டனர். இந்த பலாத்கார வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் இந்த விவகாரத்தில் கடமை தவறியதாக குற்றம்சாட்டப்பட்ட 5 போலீஸார் மற்றும் 2 அரசு டாக்டர்களை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. விடுவித்த அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுத்து மகிழ்வித்தார் குஜராத் முதல்வர் மோடி.

இத்தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், இவ்வழக்கில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தியது. அதே சமயம், கடமை தவறிய குற்றச்சாட்டுக்கு ஆளான 5 போலீஸார் மற்றும் 2 டாக்டர்களை விடுவித்து விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அவர்களை குற்றவாளிகள் என்று அறிவித்தது. இதை செய்தவர் யார் தெரியுமா? இதோ இப்போது நாட்டிலுள்ள 25 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் முதல் மூத்த நீதிபதியாக இருப்பவரான தஹில் ரமணி தான்.

இவர் மும்பையில் நீதிபதியாக இருந்தபோது, குஜராத்திலிருந்து அங்கு மாற்றப்பட்ட ‘பில்கிஸ் பானோ’ பாலியல் வழக்கில் தொடர்புடைய 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியபோதே இவர் மீது வன்மம் ஏற்பட்டது. அதைத்தான் ஒரு வருடத்தில் ஒய்வு பெற போகும் இவரை மேகாலயாவுக்குத் தூக்கி எறிந்து வன்மத்தைக் காட்டி நிற்கிறார்கள்” என்கிறார்கள் வழக்கறிஞர்கள்

அப்படியென்றால் இதே மோடி ஆட்சியில்தானே சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தஹில் ரமணி நியமிக்கப்பட்டார். அப்போதே அவர் மேகாலயாவுக்கு மாற்றப்படவில்லையே என்றும் சில வழக்கறிஞர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றம்

தஹில் ரமணிக்கு ஆதரவாக நாளை (செப்டம்பர் 10) 1800 உறுப்பினர்கள் கொண்ட வழக்கறிஞர் சங்கம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி அமர்வு முன் விதிமீறல் கட்டடங்கள், நில ஆக்கிரமிப்பு, உள்ளாட்சி நடவடிக்கை உட்பட 75 வழக்குகள் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனால், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி அமர்வில் இன்று விசாரணை இல்லை என்று நீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வழக்கு விசாரணை போன்ற எந்தவித நீதிமன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடப்போவதில்லை என்று தலைமை நீதிபதி முடிவு செய்ததாகத் தெரிகிறது. எனினும் அவரது அமர்வில் 75 வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனால் தற்போது மேற் குறிப்பிட்ட வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி தஹில் ரமணி மற்றும் துரைசாமி அடங்கிய முதல் அமர்வில் இருந்து நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய இரண்டாவது அமர்விற்கு மாற்றப் பட்டுள்ளதாகப் பதிவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தஹில் ரமணியை சட்டத் துறை அமைச்சர் சி.வி சண்முகம் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தலைமை நீதிபதி தனது முடிவைக் கைவிட அமைச்சர் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: புறப்படுகிறார் புகழேந்தி: வீடியோ வெளியான முழுப் பின்னணி!


திமுக: ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரின் வாரிசுக்கே இந்த நிலையா?


வடிவேலு ஒரு தீர்க்கதரிசி: அப்டேட் குமாரு


சிதம்பரம் நிலை: ரஜினி கவலை!


திருப்பூர் மாநாட்டில் விஜயகாந்த்: உற்சாகத்தில் தேமுதிக!


திங்கள், 9 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon