மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 28 மா 2020

சட்ட விரோதமாக குடியேறிய ஒருவருக்கும் இந்தியாவில் இடமில்லை: அமித் ஷா

சட்ட விரோதமாக குடியேறிய ஒருவருக்கும் இந்தியாவில் இடமில்லை: அமித் ஷா

அசாமில் நடைபெற்ற தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீட்டிற்கு பின் நடைபெற்ற முக்கியமான கூட்டத்தில், ‘சட்ட விரோதமாக குடியேறியவர்கள் யாரும் இனி நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாமில் (தேசிய மக்கள் பதிவேடு) என்.ஆர்.சியின் இறுதிப் பட்டியல் சென்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 3,30,27,661 பேர் குடியுரிமைக்கு விண்ணப்பித்தனர். ஆனால் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் வெறும் 3,11,21,004 நபர்களின் பெயர்கள்தான் இடம்பெற்று இருந்தது. குடியுரிமை நிரூபிக்காத அல்லது நிரூபிக்க முயன்று நிராகரிக்கப்பட்ட 19,06,657 பேரின் பெயர்கள் இந்த இறுதிப் பட்டியலில் இணைக்கப்படவில்லை.

இதனால் குடியுரிமை நிரூபிக்க முடியாதவரகளின் எதிர்காலம் என்னவாகும் எனக் கேள்வி எழுந்தது. ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குப் பின் அசாமில் மக்கள் கலக்கத்துடனும், அச்சத்துடனும் நாட்களை கடத்தி, தங்களை நிரூபிக்க தங்களால் இயன்ற வழிகளில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கவுகாத்தியில் எட்டு வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்ட வடகிழக்கு கவுன்சிலின் (என்இசி) 68வது கூட்டம் நேற்று(செப்டம்பர் 8) நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சரும் வடகிழக்கு மாநில கவுன்சில் தலைவருமான அமித் ஷா கூட்டத்தைத் தொடங்கிவைத்தார். மத்திய அரசின் வட கிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின் பொறுப்பு அமைச்சரும் மற்றும் என்இசியின் துணைத் தலைவருமான ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “தேசிய குடிமக்கள் பதிவேட்டு குறித்து பல்வேறு வகையான மக்கள் அனைத்து வகையான கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். அவர்களுக்கு சொல்லக்கூடிய ஒரே விளக்கம் இதுதான்,

தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் பணிகள் தொடங்கப்பட்டு உரிய கால வரையறையிலேயே முடிக்கப்பட்டுவிட்டது. இனி சட்ட விரோதமாக குடியேறிய ஒருவரும் இந்திய நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். அதுதான் எங்கள் திட்டம். இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறிய ஒருவர் கூட இருக்க முடியாது.

எல்லோரையும் நாங்கள் வெளியே அனுப்ப தயார் ஆகிவிட்டோம். அதற்காக தீவிரமாக உழைத்து வருகிறோம். தேசிய குடிமக்கள் பதிவேடு, நேரத்தை கணக்கில் கொண்டு வேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இதன் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என்று அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

திங்கள், 9 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon