மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

டிஜிட்டல் திண்ணை: புறப்படுகிறார் புகழேந்தி: வீடியோ வெளியான முழுப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: புறப்படுகிறார்  புகழேந்தி: வீடியோ வெளியான முழுப் பின்னணி!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. செய்திக்கு பதிலாக கோவையிலிருந்து வீடியோ வந்து விழுந்தது.

அமமுக பொதுச் செயலாளர் தினகரனை விமர்சித்து, அக்கட்சியின் கர்நாடக செயலாளர் பெங்களூரு புகழேந்தி பேசும் வீடியோ ஒன்று நேற்று காலை முதல் சமூக வலைதளங்களில் பரவியது. அதுபோலவே அமமுக சமூக வலைதள அணியினர் புகழேந்தியை கண்டபடி திட்டி முகநூல், ட்விட்டரில் பதிவிட்டுவந்தனர். புகழேந்தி பேசும் வீடியோவை நாமும் பார்த்தோம்.

கோவையில் புகழேந்தி வழக்கமாக தங்கும் ஹோட்டல் அறையில் அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட சிலர் அவரை சந்தித்துப் பேசுகின்றனர். உழைக்கிறவர்களுக்கு அங்கு (அமமுக) மரியாதை இல்லை என்று முறையிடுகிறார்கள். அதற்கு பதிலளிக்கிறார் புகழேந்தி.

“தப்பா எதுவும் நினைக்காதீங்க. போகுற இடத்துலையும் இருக்கிற இடத்துலயும் நமக்கு முகாந்திரம் இல்லாமல் இருக்கக் கூடாது. நமக்கான சரியான பொசிஷனையும், ஃப்யூச்சரையும் சரி பன்னிட்டுதான் போகனும். அந்த ஐடியாவோடதான் நான் இருக்கிறேன். என்னோட பட்டியல்ல உங்களையும் சேர்த்துகிறேன். இங்கயும் (அமமுக) எனக்கு யார் கிட்டயும் போய் நிக்க நேரம் இல்ல. அட்ரஸ் இல்லாம 14 வருஷம் வெளியில் இருந்த தினகரன ஊருக்கு காமிச்சது இந்த புகழேந்திதான். உண்மைச் சொல்லனும்னா அம்மா இறந்தப்பக் கூட அவரு கிடையாது. அதனாலதான் சொல்றேன், யோசனை பன்னி ஒரு முடிவுக்கு வருவோம். இதுதொடர்பாக நா உங்ககிட்ட பேசுறேன். டோன்ட் வொர்ரி” என்று அவர்களுக்கு புகழேந்தி ஆறுதல் கூறுவதாக முடிகிறது அந்த வீடியோ.

வீடியோ முடிந்ததும் அதன் பின்னணித் தகவல்களுடன் ஸ்டேட்டஸும் வந்து விழுந்தது.

“கோவையைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவரின் இறப்புக்கு துக்கம் விசாரிக்க அமமுகவைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் சென்றுள்ளனர். அவர்களில் 6 பேரை அமமுக மேலிடம் கட்சியை விட்டு நீக்கியது. புகழேந்தி கோவை சென்றிருந்த சமயத்தில் 6 பேரும் அவரை சந்தித்திருக்கிறார்கள். ‘நாங்கள் கட்சியெல்லாம் மாறுவதற்கு செல்லவில்லை. ஒருவர் இறந்துவிட்டார். நாகரீகத்தின் அடிப்படையில் துக்கம் விசாரிக்கவே சென்றோம். அதற்காக எங்களை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள்’ என்று புகழேந்தியிடம் 6 பேரும் புலம்பியுள்ளனர். அவர்களுக்கு புகழேந்தி ஆறுதல் சொல்லியிருக்கிறார். அந்த 6 பேருடன் அமமுகவில் உள்ள ஒரு பெண்மணியும் அங்கு இருந்திருக்கிறார். அவர்தான் அந்த வீடியோவை எடுத்து அனுப்பியிருக்கிறார். வீடியோவில் 14 வருடமாக தினகரன் அட்ரஸ் இல்லாமல் இருக்கிறார் எனக் கூறுவது புகழேந்திதான். தினகரன் அப்படி இருந்தது உண்மைதானே. அதைத்தானே புகழேந்தியும் கூறுகிறார்” என்று கூறுகிறார்கள் புகழேந்தி தரப்பினர். இதனை சொல்லிவிட்டு அடுத்தடுத்து சில மேசெஜ்களை தட்டிவிட்டது.

“அந்த வீடியோ எடுக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. தற்போது அதனை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? புகழேந்தி கட்சி மாறப்போகிறார் என்று யாரோ தினகரனிடம் தகவல் சொல்லியிருக்கிறார்கள். இதனால், இந்த வீடியோவை தற்போது ரிலீஸ் செய்தால் புகழேந்தியின் இமேஜை டேமேஜ் செய்யலாம் என்ற ஐடியாவில் அமமுகவின் ஐடி விங்தான் திட்டமிட்டு வீடியோவை வெளியிட்டிருக்கிறது. தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவிலிருந்து வெளியேறும்போது, அவர் தினகரனை விமர்சிக்கும் ஆடியோவை வெளியிட்ட அதே டீம்தான் இந்த காரியத்தையும் செய்துள்ளது. அமமுகவில் அதிருப்தியில் இருக்கும் சிலரை வெளியேற்றுவதற்கு இப்படிப்பட்ட யுக்தியை கையாளுகின்றனர் என்றும் குற்றம்சாட்டுகிறது புகழேந்தி தரப்பு.

புகழேந்தி மீது தினகரன் கோபத்தில் இருப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்கச் சென்ற டிடிவி தினகரன், அவரை சந்திக்காமலேயே திரும்பினார். அதற்கு இரு நாட்களுக்கு முன்பாக சசிகலாவை வேறொருவர் சந்தித்ததால், சிறை விதிகளின்படி தினகரன் சசிகலாவை சந்திக்கமுடியவில்லை. ஆனால், சசிகலாவை சந்தித்த அந்த நபர் யாரென்று தினகரனுக்குத் தெரியவில்லை. பெங்களூருவிலுள்ள தனக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் தினகரன் விசாரித்தபோதும், டெல்லியிலிருந்து யாரோ வந்து சந்தித்துவிட்டுச் சென்றதாகவே பதில் வந்திருக்கிறது.

புகழேந்தியிடம் கேட்டபோது, அது யாரென்று தனக்குத் தெரியாது என்று தினகரனிடம் சொல்லியிருக்கிறார். டெல்லியிருந்து வந்தது யார், எதற்காக வந்தார் என்ற எல்லா தகவல்களும் புகழேந்திக்குத் தெரியும். புகழேந்திதான் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் என்று அவர் மீது தினகரன் சந்தேகப்பட்டிருக்கிறார். இந்த கோபத்தின் வெளிப்பாடுதான் 20 நாட்களுக்குப் பிறகு வீடியோவாக வெளியாகியிருக்கிறது. ஆக, அமமுகவிலிருந்து செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், வி.பி.கலைராஜன், இசக்கி சுப்பையா வரிசையில் பெங்களூரு புகழேந்தியும் விரைவில் இணையலாம் என்று மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.


மேலும் படிக்க


திமுக: ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரின் வாரிசுக்கே இந்த நிலையா?


வடிவேலு ஒரு தீர்க்கதரிசி: அப்டேட் குமாரு


பேக் அப்: அனு கொடுத்த அறிவிப்பு!


சந்திராயன் 2: லேண்டர் விக்ரமின் நிலை என்ன? - ஸ்ரீராம் சர்மா


சிதம்பரம் நிலை: ரஜினி கவலை!


திங்கள், 9 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon